ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: கடைசி வரை போராடி இந்திய அணி தோல்வி!
டோக்கியோ ஒலிம்பிக் 2020 பெண்கள் ஹாக்கி தொடரில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
ஒலிம்பிக் 2020 தொடர் இந்திய ஹாக்கி அணிகளுக்கு மிகவும் சிறப்பான தொடராக அமைந்தது. ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் நேற்று ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. இந்திய ஆண்கள் ஹாக்கி வரலாற்றில் இது மிக முக்கியமான வெற்றியாகும். 41 ஆண்டுகளுக்கு பின் இதன் மூலம் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கியது.
இந்த நிலையில் இன்று பெண்கள் ஹாக்கி அணி கிரேட் பிரிட்டன் அணியை வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் எதிர்கொண்டது.
இந்திய பெண்கள் ஹாக்கி அணி செமி பைனல் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கணிப்புகளை பொய்யாக்கி காலிறுதிக்கு வந்த இந்திய பெண்கள் அணி 1:0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக செமி பைனலுக்கு தகுதி பெற்றது.
பைனல் செல்லும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் அணி அர்ஜென்டினாவிற்கு எதிராக செமி பைனலில் இந்தியா 2:1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
இன்னொரு பக்கம் செமி பைனல் போட்டியில் தோல்வி அடைந்த கிரேட் பிரிட்டன் அணியை இன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய பெண்கள் அணி எதிர்கொண்டது.
எப்படியாவது வெண்கல பதக்கத்தை கையேடு எடுத்துக்கொண்டு நாடு திரும்பவேண்டும் என தீர்க்கத்தோடு இந்திய மகளிர் அணி விளையாடியது.
இருப்பினும், கடைசி நொடி வரை போராடி இந்திய அணி தோல்வி அடைந்தது. கிரேட் பிரிட்டன் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது.
இதனால், முதல்முறையாக செமி பைனல் சென்ற இந்திய பெண்கள் அணி பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும், இந்திய மகளிர் ஹாக்கி அணியை நினைத்து பெருமிதம் கொள்வதாக நாடே பாராட்டிவருகிறது.