ரூ.53,866 கோடியில் இந்திய கடற்படைக்கு 8 புதிய போர்க்கப்பல்கள் - பாதுகாப்புத் துறை மெகா ஒப்பந்தம்
India Orders 8 Indigenous Navy Corvettes Deal: இந்திய கடற்படைக்கு 8 புதிய போர்க்கப்பல்கள் வாங்க பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்துள்ளது.
8 புதிய போர்க்கப்பல்கள்
இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இந்திய கடற்படைக்காக எட்டு Next-Generation Corvettes போர்க்கப்பல்களை வாங்குவதற்கான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 53,866.50 கோடி ஆகும்.

அமைச்சரவைப் பாதுகாப்புக் குழு (Cabinet Committee on Security) சமீபத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சகம் அரசு கப்பல் கட்டுமான நிறுவனங்களான Garden Reach Shipbuilders and Engineers Limited (GRSE) மற்றும் Goa Shipyard Limited (GSL) ஆகியவற்றுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதில் GRSE ஐந்து கப்பல்களையும், GSL மூன்று கப்பல்களையும் கட்டவுள்ளது.
புதிய மைல்கல்
இந்த திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், இந்த போர்க்கப்பல்கள் முழுமையாக இந்திய கடற்படையால் வடிவமைக்கப்பட்டு, இந்திய அரசுத் துறை கப்பல் கட்டுமான நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்றன. போட்டி முறையில் தேர்வு செய்யப்பட்ட உள்நாட்டு நிறுவனங்கள் இந்தப் பணியை மேற்கொள்வதால், இந்தியாவின் சொந்த கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமான திறனில் இது ஒரு புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
புதிய கார்வெட் கப்பல்கள் நவீன ஏவுகணை அமைப்புகள், மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் அதிநவீன சென்சார் தொழில்நுட்பங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் வான்வழி, கடல்வழி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ பணிகளை திறம்பட மேற்கொள்ள முடியும்.
இந்த ஒப்பந்தத்தை வரவேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த கப்பல்களின் கட்டுமானம் மூலம் கப்பல் கட்டும் துறைகளில் சுமார் 72 லட்சம் மனித-வேலை நாட்களும், துணைத் தொழில்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் (MSMEs) சுமார் 460 லட்சம் மனித-வேலை நாட்களும் அடுத்த 10 ஆண்டுகளில் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கப்பல்கள் இந்திய கடற்படையின் செயல்திறனை கணிசமாக உயர்த்தும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. கடல்சார் வர்த்தகப் பாதைகளை பாதுகாப்பது, எதிரி போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகள், கடலோர பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் போன்றவற்றில் இக்கப்பல்கள் முக்கிய பங்காற்றும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |