இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் தணிந்தது! அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எப்போது?
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வந்த கடும் ராணுவ மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம்
இந்தியா பாகிஸ்தான் இடையிலான அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்திக் கொள்வதாக இருநாடுகளும் அறிவித்துள்ளன.
இன்று மாலை 5 மணி முதல் நிலம், வான், கடல் என அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த இரு நாடுகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்டதாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை
வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று மாலை 6 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் ஜெனரல் (டிஜிஎம்ஓ) இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய டிஜிஎம்ஓவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணி முதல் இரு தரப்பினரும் அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கு பரஸ்பரம் ஒப்புக்கொண்டனர்.
இந்த உடன்படிக்கையை உடனடியாக அமல்படுத்த இரு நாட்டு ராணுவப் படைகளுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரிகள் வரும் மே 12-ஆம் தேதி பகல் 12 மணிக்கு மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்" என்று தெரிவித்தார்.
இந்த தகவல் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
இதனிடையே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே துப்பாக்கிச் சூட்டை நிறுத்துவது மற்றும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான ஒருமித்த கருத்து இன்று எட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தனது நிலையான மற்றும் சமரசமற்ற போக்கை அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
இனியும் அவ்வாறே தொடரும்" என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதன் மூலம், அமைதி முயற்சியின்போதும் இந்தியா தனது கொள்கையில் உறுதியாக உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |