சூரியனுக்கான இந்தியாவின் முதல் விண்கலம்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்1
சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக இந்தியாவின் ஆதித்யா எல்1 என்ற விண்கலத்துடன் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ந்துள்ளது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல் 1
ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 11.50 மணி அளவில் இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
ஆதித்யா எல்1 விண்கலம் மூன்று படிநிலைகளை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் அடுத்த சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது குறித்து இன்னும் ஒரு மணி நேரத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சுமார் 125 நாட்கள் பயணத்தின் முடிவில் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் ஆதித்யா எல் 1 விண்கலமானது ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ என்னும் பகுதியில் நிலைநிறுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் கதிர்வீச்சு, காந்தப்புலம், வெளிப்புற பகுதியின் வெப்ப நிலை ஆகியவற்றை ஆராய்ச்சி செய்ய உள்ளது.
சூரியனுக்கான முதல் விண்கலம்
ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனுக்கான இந்தியாவின் முதல் விண்கலமாகும், இஸ்ரோ மற்றும் விஞ்ஞானி குழுக்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விண்கலம் சுமார் 1,476 கிலோ எடை கொண்டது.
ISRO
இதில் இமேஜிங் டெலஸ்கோப், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், பிளாஸ்மா அனலைசர், சோலார் அல்ட்ரா வைலட் உள்ளிட்ட 7 வகையான ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |