இந்தியாவின் விலையுயர்ந்த விநாயகர் சிலை.., 66 கிலோ தங்கம், 325 கிலோ வெள்ளி, ரூ.400 கோடியில் காப்பீடு
66 கிலோ தங்கம் மற்றும் 325 கிலோ வெள்ளியில் அலங்காரம் செய்யப்பட்ட விநாயகர் சிலையை மும்பையில் வழிபாடு செய்துள்ளனர்.
விலையுயர்ந்த விநாயகர் சிலை
இந்தியா முழுவதும் கடந்த 7 -ம் திகதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து பின்னர் நீர்நிலைகளில் கரைத்தனர்.
அந்தவகையில் மும்பையில் உள்ள கிங்ஸ் சர்கிள் பகுதியில் 70 -வது ஆண்டாக கவுட் சரஸ்வத் பிராமின் (ஜிஎஸ்பி) சேவா மண்டல் அமைப்பின் சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது.
இந்த சிலையானது சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டது. அதாவது, களிமண் மற்றும் இயற்கை வண்ணம் ஆகிய பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டது. காகிதம்,பிளாஸ்டிக் ஆகியவற்றை பயன்படுத்தவில்லை.
இது தொடர்பாக அமைப்பின் தலைவர் அமித் பாய் கூறும்போது, "இந்த விநாயகர் சிலையானது 66 கிலோ தங்கம், 325 கிலோ வெள்ளியில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலான ஆபரணங்கள் பக்தர்களால் வழங்கப்பட்டவை. இதனால் இந்த விநாயகர் நாட்டிலேயே விலை உயர்ந்தவராக கருதப்படுகிறார்.
மேலும், இந்த சிலை அமைந்துள்ள பந்தலுக்கு ரூ.400 கோடிக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |