உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியா பின்னடைவு., ஐரோப்பிய நாடுகள் முன்னிலை
உலக பாஸ்போர்ட் குறியீட்டு (Global Passport Index) 2026 தரவரிசையில் இந்தியா 200 நாடுகளில் 125-வது இடத்தில் உள்ளது.
நமீபியா 124-வது இடத்தில் இருந்து இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது. இந்த தரவரிசை, குடிமக்கள் எவ்வளவு சுதந்திரமாக பயணம் செய்ய முடிகிறது என்பதையும், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தையும் மதிப்பீடு செய்கிறது.

இந்தியாவின் பாஸ்போர்ட், மொத்த மதிப்பீட்டில் 125-வது இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, பயண சுதந்திரம் (Mobility) பகுதியில் இந்தியா 135-வது இடத்தில் உள்ளது. வாழ்க்கைத் தரத்தில் 118-வது இடம் கிடைத்துள்ளது. இதனால், இந்திய பாஸ்போர்ட் உலகளவில் அதிக வாய்ப்புகளை வழங்குவதில் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
அதே நேரத்தில், ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டிலும் (Henley Passport Index) இந்தியாவின் நிலை குறைந்துள்ளது. 2026 ஜூலை மாத தரவரிசையில் இந்தியா 80-வது இடத்தில் உள்ளது.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 56 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது வருகை விசா (Visa-on-arrival) மூலம் செல்ல முடிகிறது. ஆனால் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு இன்னும் விசா தேவைப்படுகிறது.
இந்தியாவை ஒப்பிடும்போது, ஐரோப்பிய நாடுகள் உலகின் முன்னணியில் உள்ளன. மிகவும் வலுவான பாஸ்போர்ட் பட்டியலில் 10 இடங்களில் 9 ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
- ஸ்வீடன்
- ஸ்விட்சர்லாந்து
- பின்லாந்து
- ஜேர்மனி
- டென்மார்க் (நெதர்லாந்துடன் இணைந்து)
- நெதர்லாந்து
- அயர்லாந்து
- பிரித்தானியா (UK)
- நோர்வே
- சிங்கப்பூர்
ஸ்வீடன், முதலிடம் பெற்றுள்ளது. பயண சுதந்திரத்தில் 11-வது இடம், முதலீட்டில் 9-வது இடம், வாழ்க்கைத் தரத்தில் 2-வது இடம் பெற்றதால் மொத்தத்தில் உலகின் மிக வலுவான பாஸ்போர்ட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, பாஸ்போர்ட் என்பது வெறும் எல்லையை கடக்கும் ஆவணம் மட்டுமல்ல, உலகளவில் வாழ, வேலை செய்ய, முதலீடு செய்யும் வாய்ப்புகளையும் பிரதிபலிக்கிறது என்பதை காட்டுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |