ரஷ்ய எரிபொருள் இறக்குமதியில் இந்தியா 3-ஆம் இடத்திற்கு சரிவு - Reliance முக்கிய காரணம்
2025 டிசம்பர் மாதத்தில், இந்தியா ரஷ்யாவின் எரிபொருள் இறக்குமதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
காரணம், Reliance Industries மற்றும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், ரஷ்ய கச்சா எண்ணை கொள்முதலை பெருமளவில் குறைத்தது என எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையம் (CREA) தெரிவித்துள்ளது.
டிசம்பரில், இந்தியாவின் ரஷ்ய hydrocarbon இறக்குமதி 2.3 பில்லியன் யூரோவாக இருந்தது.
நவம்பர் மாதத்தில் இது 3.3 பில்லியன் யூரோவாக இருந்த நிலையில், 29 சதவீதம் குறைந்துள்ளது.

அதேசமயம், துருக்கி (Turkiye) 2.6 பில்லியன் யூரோ மதிப்பில் வாங்கி, இந்தியாவை முந்தி இரண்டாம் இடத்தை பிடித்தது. சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து, ரஷ்ய புதைபடிவ எரிபொருள் (fossil fuel) வருவாயில் 48 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.
இந்தியா 1.8 பில்லியன் யூரோவிற்கு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது. அதேபோல், நிலக்கரி 424 மில்லியன் யூரோவிற்கும் மற்ற எண்ணெய் பொருட்களை 82 மில்லியன் யூரோவிற்கும் வாங்கியுள்ளது.
Reliance-ன் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம், டிசம்பரில் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை பாதியாகக் குறைத்தது.
அமெரிக்காவின் OFAC தடைகள் காரணமாக Rosneft, Lukoil போன்ற நிறுவனங்களிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது சிக்கலானது.
அரசு சுத்திகரிப்பு நிறுவனங்கள் கூட 15 சதவீதம் அளவுக்கு ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்குவதைக் குறைத்துள்ளன.
இருப்பினும், Indian Oil Corporation (IOC) போன்ற சில நிறுவனங்கள், தடை செய்யப்படாத ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து வாங்குவதைத் தொடர்கின்றன.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த சில ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ரஷ்யாவுக்கு மாறியது. 2022-இல் 1 சதவீதம் மட்டுமே இருந்த ரஷ்ய எண்ணெய் பங்கு, 2025-இல் 40 சதவீதம் வரை உயர்ந்தது. ஆனால் டிசம்பரில், இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 25 சதவீதமாகக் குறைந்தது.
Reliance மற்றும் அரசு refineries எடுத்த முடிவுகள், இந்தியாவின் ரஷ்ய எரிபொருள் இறக்குமதி நிலையை மாற்றியமைத்து, உலகளாவிய எரிசக்தி சந்தையில் புதிய சமநிலையை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |