சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா: சர்வதேச விமான நிலைய கவுன்சில் அறிக்கை!
2026-ல் விமானப் பயணிகள் எண்ணிக்கையில் சீனாவை இந்தியா முந்திச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா
சர்வதேச விமான நிலைய கவுன்சில் (ACI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்திய விமானப் போக்குவரத்து சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
இந்த அபார வளர்ச்சியின் காரணமாக, 2026 ஆம் ஆண்டில் விமானப் பயணிகள் போக்குவரத்தில் இந்தியா சீனாவை முந்திச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் இந்தியாவின் விமானப் பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது சீனாவின் 12 சதவீத வளர்ச்சியை விட சற்று குறைவாக இருந்தாலும், எதிர்கால கணிப்புகள் இந்தியாவின் அதிரடியான முன்னேற்றத்தை சுட்டிக்காட்டுகின்றன.
ACI-யின் ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய இயக்குநர் ஸ்டெஃபனோ பரோன்சி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியா தனது விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
இது விமானப் பயணிகள் போக்குவரத்துக்கான ஒரு முக்கியமான வளர்ந்து வரும் சந்தையாக உள்ளது," என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவின் விமானப் பயணிகள் வளர்ச்சி விகிதம் 2026 ஆம் ஆண்டில் 10.5 சதவீதமாகவும், 2027 ஆம் ஆண்டில் 10.3 சதவீதமாகவும் இருக்கும் என்று ஏசிஐ மதிப்பிட்டுள்ளது.
அதே காலகட்டத்தில் சீனாவின் வளர்ச்சி விகிதம் முறையே 8.9 சதவீதம் மற்றும் 7.2 சதவீதமாக குறையும். இதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டில் இந்தியா சீனாவை விட அதிகமான விமானப் பயணிகளை கொண்டிருக்கும்," என்றார்.
2023 முதல் 2027 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் விமானப் பயணிகள் போக்குவரத்தின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதமாக இருக்கும் என்றும், இது சீனாவின் 8.8 சதவீத வளர்ச்சியை விட அதிகம் என்றும் ஏசிஐ தெரிவித்துள்ளது.
நீண்ட கால நோக்கில் பார்த்தால், 2023 முதல் 2053 வரையிலான காலகட்டத்தில் இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளரும் விமானச் சந்தையாக இருக்கும் என்றும், இதன் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவின் வளர்ச்சி 3.8 சதவீதமாக இருக்கும்.
இந்தியாவில் தற்போது 159 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும், மத்திய அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக 50 விமான நிலைய மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இந்த உள்கட்டமைப்பு மேம்பாடுகள் நாட்டின் விமான போக்குவரத்து வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |