பதிலடிக்கு தயாராகும் இந்தியா... சேதங்களுக்கு ஏற்ப வரி விதிக்க முடிவு
ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி வேட்டை ஒரு புதிய வடிவத்தை எடுத்து, அமெரிக்காவிற்கும் ஒரு சில நாடுகளுக்கும் இடையே ஒரு வகையான வரிப் போராக மாறியுள்ளது.
பதிலடி கொடுக்க தயார்
இதில், இந்தியா மீது ட்ரம்ப் நிர்வாகம் 50 சதவீத வரி விதித்துள்ளது. மட்டுமின்றி, அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை வாங்குமாறும் இந்தியா மீது ட்ரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் வரிகளுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அமெரிக்கா, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மற்றும் பிற பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்ததற்கு பதிலளிக்கும் விதமாக,
தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது. இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் இந்தியாவின் முதல் முறை பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கும்.
ஜூலை 31 அன்று ட்ரம்ப் நிர்வாகம் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் 25 சதவீத வரியை அறிவித்த நிலையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தார்.
சட்டப்பூர்வ நகர்வு
ட்ரம்ப் நிர்வாகம் எஃகு மற்றும் அலுமினியம் மீது 25 சதவீத வரியை விதித்ததன் பின்னர் இந்த விவகாரம் பிப்ரவரி மாதத்திலிருந்து புகைந்து வருகிறது. ஜூன் மாதத்தில், வரி இரட்டிப்பாக 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது குறைந்தது 7.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதியைப் பாதித்துள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில், ட்ரம்பின் வரி விதிப்பு குறித்து இந்தியா உலக வர்த்தக அமைப்பிடம் (WTO) ஆலோசனை கோரியது. மட்டுமின்றி, அமெரிக்கா இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததை அடுத்து, WTO விதிகளின் கீழ் பழிவாங்கும் நடவடிக்கைக்கான சட்டப்பூர்வ நகர்வுகளை இந்தியா முன்னெடுத்துள்ளது.
அமெரிக்க வரிகளால் ஏற்படும் சேதங்களுக்கு ஏற்ப தெரிவு செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரிகளை விதிப்பதன் மூலம் பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்க இந்தியா முடிவெடுத்துள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |