மரண அடி வாங்கிய இந்தியா: டி20 தொடரை 2-3 என்ற கணக்கில் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இலக்கை நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ் அணி
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தனர்.
ஆனால் பின்னர் வந்த சூர்ய குமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சருடன் 61 ஓட்டங்கள் குவித்தார்.
மறுமுனையில் சூர்ய குமார் யாதவ்-க்கு ஆதரவாக விளையாடிய திலக் வர்மா 18 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 27 ஓட்டங்கள் சேர்த்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் வந்த இந்திய வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதை அடுத்து இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 165 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை ரொமாரியோ ஷெப்பர்ட் 4 விக்கெட்டையும், அகேல் ஹொசின் மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்
இந்நிலையில் 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் பிராண்டன் கிங் கடைசி வரை விக்கெட்டை பறிக் கொடுக்காமல் 55 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்சருடன் 85 ஓட்டங்கள் குவித்து வெஸ்ட் அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 35 பந்துகளில் 47 ஓட்டங்களும், சாய் ஹோப் 13 பந்துகளில் 22 ஓட்டங்களும் விளாசினார்கள்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்கள் முடிவிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 171 ஓட்டங்கள் குவித்ததுடன் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்த இரண்டு போட்டிகளில் இந்தியாவும் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர்.
இந்நிலையில் 5 வது மற்றும் இறுதி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை 2-3 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |