ஹூடா அதிரடி சதம்., கடைசி பந்து வரை பரபரப்பு., இந்தியா திகில் வெற்றி!
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திகில் வெற்றி பெற்றது.
அயர்லாந்து சென்ற இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது. அதனைட் தொடர்ந்து டப்ளினில் நடந்த இரண்டாவது போட்டியில், 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் ருதுராஜ், அவேஷ் கான், சகால் நீக்கப்பட்டு சாம்சன், ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டனர்.
ஹூடா மிரட்டல்
இந்திய அணிக்கு இஷான் கிஷான் (3), சஞ்சு சாம்சன் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது.
சாம்சனுடன் இணைந்த தீபக் ஹூடா, அடைர் வீசிய மூன்றாவது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு விரட்டினார். யங் வீசிய போட்டியின் 6-வது ஓவரில் ஹூடா ஒரு சிக்சர், சாம்சன் 2 பவுண்டரி அடிக்க, 15 ஓட்டங்கள் கிடைத்தன.
இந்திய அணி 10.1 ஓவரில் 101/1 ஓட்டங்கள் எட்டியது. ஹூடாவுக்கு ஈடு கொடுத்த சாம்சன், டிலானி பந்தை பவுண்டரிக்கு அனுப்ப, சர்வதேச டி-20 அரங்கில் தனது முதல் அரைசதம் எட்டினார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு 176 ஓட்டங்கள் சேர்த்த போது, அடைர் பந்தில் போல்டானார் சாம்சன் (77 ஓட்டங்கள், 42 பந்து). சூர்யகுமார் 15 ஓட்டங்கள் எடுத்தார். தீபக் ஹூடா, 55-வது பந்தில் சர்வதேச டி-20 அரங்கில் முதல் சதம் எட்டினார். இவர் 57 பந்தில் 104 ஓட்டங்கள் எடுத்து திரும்பினார்.
தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல் என மூவரும் டக் அவுட்டாகினர். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ஓட்டங்கள் எடுத்தது.
ஹர்திக் பாண்ட்யா (13), புவனேஷ்வர் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
அயர்லாந்து அதிரடி துவக்கம்
அயர்லாந்து அணிக்கு பால்பிர்ன் (60), ஸ்டெர்லிங் (40) ஜோடி மிரட்டல் துவக்கம் கொடுத்தது. டிலானி (0), டக்கர் (5) ஏமாற்றினர். பின் இணைந்த டெக்டர், டாக்ரெல் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
புவனேஷ்வர் பந்தில் டெக்டர் (39) அவுட்டானார். உம்ரான் வீசிய கடைசி ஓவரில் அயர்லாந்து வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன. முதல் 3 பந்தில் 9 ஓட்டங்கள், அடுத்த 2 பந்தில் 2 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. கடைசி பந்தில் 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், உம்ரான் துல்லியமாக வீச, 1 ஓட்டம் மட்டும் எடுக்கப்பட்டது.
அயர்லாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 221 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி 2-0 என டி-20 தொடரை கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தீபக் ஹூடா வென்றார்.