புயலாய் சுழன்றடித்த ரோகித் சர்மா, சுப்மன் கில்: நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்து அசத்திய இந்திய அணி!
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்திய அணி அதிரடி
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது.
அந்த வகையில் இன்று மதியம் 1:30 மணிக்கு இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
India vs Newzealand, India won the series 3-0 ? pic.twitter.com/qXzcvum1vT
— Raja Mishra (@RajaMis78830051) January 24, 2023
இதனால் முதல் பேட்டிங்கில் இந்திய அணி களத்தில் இறங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி ஆரம்பம் முதலே நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர்.
கேப்டன் ரோகித் சர்மா 85 பந்துகளில் 9 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என விளாசி 101 ஓட்டங்கள் குவித்து அசத்த, சுப்மன் கில் 78 பந்துகளில் 13 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசி 112 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணியின் ஸ்கோர் 50 ஓவர்கள் முடிவில் 500 ஓட்டங்களை கூட எட்டலாம் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் அவுட் ஆகி வெளியேறியதும் இந்திய அணியின் ஸ்கோர் வேகம் குறைய தொடங்கியது.
ஹர்திக் பாண்டியா மட்டும் 54 ஓட்டங்கள் குவித்து அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி 385 ஓட்டங்கள் குவித்து அசத்தியது.
தொடரை வென்ற இந்தியா
வெற்றிக்கு 386 ஓட்டங்கள் என்ற கடுமையான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்து இருந்தது. ஃபின் ஆலன், டேரில் மிட்செல், டாம் லாதம் போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சியளித்தனர்.
டெவோன் கான்வே மட்டும் 100 பந்துகளில் 138 ஓட்டங்கள் குவித்து நியூசிலாந்து அணிக்கு ஆறுதல் அளித்தார்.
எப்படி இருப்பினும் மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது, இதனால் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடரில் 3-0 என்ற நிலையில் இந்திய அணி முன்னிலை பெற்றதுடன் கோப்பையையும் தட்டிச் சென்றுள்ளனர்.