"அசுத்தமான இந்து நீ" அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் மீது 'துப்பி' இனவெறி தாக்குதல்!
அமெரிக்காவில் இந்திய-அமெரிக்கர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய-அமெரிக்கர் ஒருவரைப் பார்த்து "நீ ஒரு அசுத்தமான இந்து", "அருவருப்பான நாய்" என மற்றோரு இந்திய வம்சாவளியினர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய-அமெரிக்க ஆண் ஒருவர் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். அவர் ஒரு "அசுத்தமான இந்து" மற்றும் "அருவருப்பான நாய்" என்று அவதூறான வார்த்தைகளால் இனவெறி தாக்குதலுக்கு ஆளானார்.
டெக்ஸாஸில், நான்கு இந்திய வம்சாவளி பெண்கள் மீது இனவெறி தாக்குதல் தாக்குதல் நடந்து சில நாட்களில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 21 அன்று கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள கிரிம்மர் பவுல்வர்டில் உள்ள டகோ பெல்லில் 37 வயதான தேஜிந்தர் சிங் என்பவரால் கிருஷ்ணன் ஜெயராமன் என்பவர் வார்த்தைகளால் தாக்கப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
யூனியன் சிட்டியைச் சேர்ந்த தேஜிந்தர் சிங் மீது, சிவில் உரிமைகளை மீறிய வெறுப்புக் குற்றம், தாக்குதல் மற்றும் அமைதியைக் குலைக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல் ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டதாக ஃப்ரீமாண்ட் காவல் துறை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணன் ஜெயராமன், எட்டு நிமிடங்களுக்கு மேல் நீடித்த அவரது தாக்குதலை தனது தொலைபேசியில் பதிவு செய்தார்.
அந்த வீடியோவில் "நாயே, நீ கேவலமாக இருக்கிறாய். நீ கேவலமாக இருக்கிறாய். இனி இதுபோல் பொது வெளியில் வராதே.., அசுத்தமான இந்து நீ..." என்று தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்துள்ளார். மேலும், அந்த வீடியோவில் கிருஷ்ணன் ஜெயராமன் மீது தேஜிந்தர் சிங் இரண்டு முறை எச்சில் துப்பினார்.
கிருஷ்ணன் ஜெயராமன், இந்த சம்பவத்தால் தான் பயந்துவிட்டதாகவும், குற்றவாளியும் இந்தியன் என்பதை பின்னர் அறிந்து மிகவும் வருத்தமடைந்ததாகவும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து ஃபிரீமாண்ட் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள இந்திய-அமெரிக்க சமூகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.