அமெரிக்க இடைத்தேர்தலில்… வெற்றிகளை குவித்து அசத்தும் இந்திய வம்சாவளியினர்!
அமெரிக்க இடைத் தேர்தலில் இந்திய அமெரிக்கர்கள் வெற்றி.
பிரதிநிதி சபை தேர்தலில் எட்டு இந்திய அமெரிக்க வேட்பாளர்கள் வரை வெற்றி பெற வாய்ப்பு.
அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள இடைத் தேர்தலில் மேரிலேண்ட் பகுதி துணைநிலை ஆளுநராக அருணா மில்லர் மற்றும் பென்சில்வேனியா மாநில பிரதிநிதி சபைக்கு அரவிந்த் வெங்கட் என்ற இந்திய அமெரிக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சிக் காலம் நான்கு ஆண்டுகளாக இருக்கும் நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள பிரதிநிதி சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டு அவைகளுக்கான இடைத்தேர்தல் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
செனட் உறுப்பினர்களின் ஆட்சிக்காலம் 6 ஆண்டுகளாகவும், பிரதிநிதி சபையின் ஆட்சிக்காலம் 2 ஆண்டுகளாகவும் இருக்கும் நிலையில், இந்த இடைத் தேர்தலானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
தற்போது இந்த இடைத் தேர்தல் மொத்தமுள்ள 435 பிரதிநிதி இடங்களுக்கும், செனட் சபையின் 100 இடங்களில் 35 இடத்திற்கும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், House District 30 பிரதிநிதி சபையின் தொகுதியில் இந்திய வம்சாவளி அமெரிக்கர் அரவிந்த் வெங்கட் என்பவர் வெற்றி பெற்றுள்ளார், இவர் ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.
அவரை போலவே மற்றொரு ஜனநாயக கட்சி வேட்பாளரான இந்திய அமெரிக்கர் அருணா மில்லர் மேரிலேண்ட் பகுதியின் துணைநிலை ஆளுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் வசிக்கும் 6ல் ஒருவர் வெளிநாட்டினர்: இந்தியர்கள் முதலிடம்!
அமெரிக்காவில் முதல் முறையாக அமெரிக்க இந்தியர் ஒருவர் துணைநிலை ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த இடைத் தேர்தலில் பிரதிநிதி சபைக்கு எட்டு இந்திய வம்சாவளியினர் தேர்வு செய்யப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது, இவர்களில் பலர் ஆளும் ஜனநாயக கட்சியினர் ஆவார்கள்.