இந்தியாவின் பதிலடி உறுதி... தயார் நிலையில் பாகிஸ்தான் இராணுவம்: அமைச்சர் கசியவிட்ட தகவல்
கடந்த வாரம் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், இந்தியாவின் இராணுவ நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நடவடிக்கை உறுதி
இதனால், அணு ஆயுத பலம் பொருந்திய இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. குறித்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில்,
அந்த விவகாரம் இந்தியாவில் சீற்றத்தைத் தூண்டியதுடன், பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது. மேலும் அப்பாவி பொதுமக்கள் மீதான மிக மோசமான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரிப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டி வரும் நிலையில்,
இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் நடவடிக்கை உறுதி என கருதுவதால் படைகளை பலப்படுத்தியுள்ளோம். இப்படியான சூழ்நிலையில், சில உறுதியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, இந்தியத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் இராணுவம் அரசாங்கத்திற்குத் தகவல் தெரிவித்ததாகவும் ஆசிஃப் கூறியுள்ளார்.
இந்தியாவின் நடவடிக்கை உடனடியாக நிகழும் என்று அவர் நினைப்பதற்கான காரணங்கள் குறித்து உறுதியான தரவுகளை அவர் வெளியிட மறுத்துள்ளார். பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், தங்களது இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் முடிவை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடுநிலையான விசாரணை
இதனிடையே, இந்தத் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதிகளைத் தேடும் பணியை இந்தியா முடுக்கி விட்டுள்ளது, அவர்களில் இருவர் பாகிஸ்தானியர்கள் என இந்தியா அடையாளம் கண்டுள்ளது.
ஆனால், பாகிஸ்தான் அதை மறுத்துள்ளதுடன், நடுநிலையான விசாரணைக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுடனான தூதர உறவுகளைக் குறைத்துள்ளது, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியுள்ளது,
முக்கிய நில எல்லைக் கடவையை மூடுவதாக அறிவித்துள்ளது மற்றும் பாகிஸ்தான் நாட்டினருக்கான விசாக்களை ரத்து செய்துள்ளது. இதனையடுத்து இந்திய தூதர்கள் மற்றும் இராணுவ ஆலோசகர்களை வெளியேற்ற பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது,
இந்திய நாட்டினருக்கான விசாக்களை ரத்து செய்ததுடன் இந்திய விமானங்களுக்கு அதன் வான்வெளியைத் தடை செய்தது. இதனால், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா செல்லும் இந்திய விமான சேவை நிறுவனங்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |