ஒரே வாரத்தில் மூன்று இந்திய கப்பல்கள் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல்
இந்த வாரம் மத்திய கிழக்கில் இந்தியக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து, வியாழக்கிழமை ஓமன் கடற்பரப்பில் ஜல்வீர் என்ற நிலக்கீல் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மாலுமிகள்
குறித்த கப்பலில் இருந்த 20 இந்தியப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓமன் அருகே 'செட்டபெல்லோ' என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில், மூன்று இந்திய மாலுமிகள் நேற்று முன்தினம் மரணமடைந்தனர்.

ஓமானின் ஷினாஸ் துறைமுகத்திற்கு அருகே, கினியா-பிசாவ் கொடியை ஏந்திய ஜல்வீர் கப்பலின் இயந்திர அறை மற்றும் புகைபோக்கியைச் சுற்றி தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அக்கப்பல் ஆபத்து அழைப்பை அனுப்பியதாக பிரிட்டனின் கடல்சார் இடர் மேலாண்மை நிறுவனமான வான்கார்ட் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஓமன் அரச கடற்படையுடன் இணைந்து கப்பல் குழுவினர் வெளியேற்றப்பட்டு வருவதாக இந்தியக் கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்தக் கப்பல் மீது அமெரிக்கக் கடற்படை தாக்குதல் நடத்தியதாக, இந்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மூன்றாவது எண்ணெய் கப்பலாக
இச்சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டால், திங்களன்று துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி 'மரிவெக்ஸ்' (Marivex) எண்ணெய் கப்பல் செயலிழக்கச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வாரத்தில் அமெரிக்கப் படைகளால் தாக்கப்படும் இந்தியக் குழுவினரைக் கொண்ட மூன்றாவது எண்ணெய் கப்பலாக இதுவாகும்.

உலகளாவிய அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தை ஈரான் கடுமையாகக் குறைத்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 13 அன்று ஈரான் தொடர்பான கப்பல் போக்குவரத்தின் மீது அமெரிக்கா ஒரு முற்றுகையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |