மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தடை? வெளியான விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு விதித்துள்ளது என்ற செய்தி வெளியான நிலையில் பி.சி.சி.ஐ அது தொடர்பில் விளக்கமளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான உணவு பட்டியல் என சமீபத்தில் ஒரு பட்டியல் வெளியானது.
இதில் வழக்கமான உணவுகளை தவிர்த்து சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியை எந்த வடிவத்திலும் சாப்பிடக்கூடாது, அவைகள் அவர்களது உணவு பட்டியலில் வரக்கூடாது என்றும், வீரர்களுக்கு வழங்கப்படும் இறைச்சி உணவுகள் அனைத்தும் ஹலால் செய்யப்பட்டவைகளாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்திய வீரர்களுக்கு உடல் தகுதி மிக முக்கியமாக கருதப்படுவதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. வீரர்களின் உணவு உரிமை தனிப்பட்டதாகும். இதில் கிரிக்கெட் வாரியம் தலையிடுவது சரியா? என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து விளக்கிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமால், இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் எந்த ஒரு வீரர்களுக்கோ அல்லது அணி ஊழியர்களுக்கோ என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை.
இந்த வதந்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை. இந்த உணவு திட்டம் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை. செயல்படுத்தப்பட மாட்டாது. உணவு குறித்து கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தல் வழங்கவில்லை.
அவர்கள் தங்கள் சொந்த உணவை தேர்ந்தெடுக்க சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.