நெற்றியில் பட்டையுடன் WWE-யில் களம் இறங்கிய இந்தியர்!
WWE என்றதும் பலருக்கும் நினைவுக்கு வரும் பெயர் அண்டர் டேக்கர்.. அவரைத் தொடர்ந்து தி ராக், ஜான் சேனா, ரோமன் ரெய்ன், பிராக் லசனர் என நீள்கிறது அந்த பட்டியல்.
இந்த பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்திய வீரர் தி கிரேட் காளி. 7 அடி உயரம், ஒரே அடியில் அண்டர் டேக்கரையே வீழ்த்தும் பலம் என மிரட்டியவர் கிரேட் காளி. அவரைத் தொடர்ந்து, இந்த போட்டியில் அடியெடுத்து வைத்திருக்கும் மற்றொரு இந்திய வீரர் வீர் மகான்.
உத்தர பிரதேச மாநிலத்தில் லாரி ஓட்டுநரின் 9 குழந்தைகளில் ஒருவரான வீர் மகானின் இயற்பெயர் ரிங்கு சிங். பள்ளி நாட்களில் ஈட்டி எறிதலில் பங்கேற்று, தேசிய அளவிலான ஜூனியர் பிரிவு போட்டிகளில் வென்ற பதக்கங்கள் ஏராளம். ஈட்டி எறியும் அனுபவத்தோடு, 2008ல் தி மில்லியன் டாலர் ஆர்ம் என்ற டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார் ரிங்கு சிங். பேஸ்பால் விளையாடும் திறமையான வீரர்களின் கண்டறிவதற்காக நடத்தப்பட்டது அந்த நிகழ்ச்சி.
அப்போது பேஸ்பால் விளையாடிய அனுபவமே இல்லை அவருக்கு இருந்தாலும் ஈட்டி எறிதலில் இருந்த அனுபவத்தோடு, அதிவேகத்தில் பேஸ்பால் வீசி முதலிடம் பிடித்தார் ரிங்கு சிங்.இதன்பிறகு பேஸ்பால் மீதான ஆர்வம் அதிகரிக்க, அமெரிக்காவுக்கு பறந்தார் அவர் பீட்டர்ஸ்பர்க் பைரேட்ஸ் என்ற அமெரிக்க பேஸ்பால் அணியில் முதல் இந்திய வீரராக இணைந்து கொண்டார் ரிங்கு சிங்.
2009 முதல் 2016ஆம் ஆண்டு வரை பேஸ்பாலிலும் பல பதக்கங்களை வென்ற ரிங்கு சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவானதே Million Dollar Arm திரைப்படம். அதன்பிறகு அவர் கவனம் செலுத்தியது வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் எனப்படும் WWE... 2018ல் WWE உடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ரிங்கு சிங், இந்திய வீரர் சௌரவ் குஜ்ஜருடன் இணைந்து செயல்பட்ட அணி, தி இண்டஸ் ஷேர். WWE NXT போட்டிகளில் பங்கேற்று 12 முறை வெற்றிபெற்ற ரிங்கு சிங், WWE ராவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஆண்டு 2021.
நீண்ட தலைமுடி, கருமையான கண்கள், நெற்றியில் பட்டையோடு களமிறங்கிய ரிங்கு சிங்கின் தற்போதைய பெயர் வீர் மகான். ஆவேசமாக களமிறங்கும் வீர் மகானின் மார்பில் இந்தியில் எழுதப்பட்டுள்ளது அம்மா என்ற வார்த்தை. பங்கேற்ற முதல் போட்டியிலே பறந்து பறந்து தாக்கும் ரே மிஸ்டீரியோவை பந்தாடி, வியப்படைய வைத்தார் வீர் மகான்.
இப்போது அவர் சவால் விடுத்திருப்பது பிராக் லசனனுக்கும், ரோமன் ரெய்ன்க்கும். இது இன்றைய wwe ரசிகர்களின் பேசுபொருளாக மாறி, டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார் இந்த வீர் மகான்.