நடுவானில் உலோக முள் கரண்டியால் விமான பயணிகள் மீது தாக்குதல்: இந்தியர் கைது
விமானத்தில் பயணி ஒருவர் உலோக முள் கரண்டியால்(fork) சக பயணிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடுவானில் சக பயணிகள் இடையே வெடித்த மோதல்
சனிக்கிழமை அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து ஜேர்மனியில் பிராங்பேர்ட் நகருக்கு லுஃப்தான்சா விமானம் அட்லாண்டிக் கடலை கடந்து சென்ற போது சந்தேக நபரான 28 வயது பிரனீத் குமார் உசிறிப்பள்ளி(Praneeth Kumar Usiripalli) இரண்டு சக இளம் பயணிகள் மீது உலோக முள் கரண்டியால் தீவிரமான தாக்குதல் நடத்தியுள்ளார்.

நடுவானில் விமானத்தில் நடந்த தூண்டுதலற்ற இந்த தாக்குதலால் விமானம் அவசரமாக மசாசூசெட்ஸின் பாஸ்டன் நகருக்கு திருப்பி விடப்பட்டது.
17 வயதுடைய இரண்டு இளம் பயணிகள் மீது உணவு பரிமாறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த தாக்குதலானது நடைபெற்றுள்ளது.
விமான பணியாளர் இந்த தாக்குதலை தடுக்க முயற்சி செய்த போது அவர்களை தாக்க முயன்றதாகவும் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநில கூட்டாட்சி வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தாக்குதல்தாரி

விமானம் பாஸ்டன் நகரில் தரையிறக்கப்பட்டதும், தாக்குதல்தாரியான பிரனீத் குமார் உசிறிப்பள்ளி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கொடிய ஆயுதம் கொண்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்திய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதல்தாரி இந்திய நாட்டவர் என்றும், அவர் அமெரிக்காவுக்குள் மாணவர் விசா மூலம் நுழைந்தவர் என்றும் கூட்டாட்சி வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |