கனடாவில் கரடி தாக்கியதில் இந்திய இளைஞர் பலி., மக்களுக்கு எச்சரிக்கை
கனடாவின் சஸ்காட்சுவான் மாகாணத்தில் கரடி தாக்கியதில் 27 வயது இந்திய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், 6 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு நடந்த முதல் உயிரிழப்பு சம்பவமாகும்.
அந்த இளைஞர், வான்கூவரில் அமைந்துள்ள UraniumX Discovery Corp நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளராக Nordbye ஏரி அருகே உள்ள யூரேனியம் ஆய்வு தளத்தில் பணியாற்றி வந்தார்.
வெள்ளிக்கிழமை மாலை கரடி தாக்கியதில் அவர் உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடம் சஸ்காடூனிலிருந்து சுமார் 850 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அந்த இளைஞர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கனடாவுக்கு குடிபெயர்ந்து, பிரிட்டிஷ் கொலம்பியாவின் பென்டிக்டனில் வசித்து வந்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வமாக அவரது பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.
இச்சம்பவத்திற்குப் பிறகு, அங்கு இருந்த ஒருவர் கரடியை சுட்டுக் கொன்றார். பின்னர் அந்த கரடி சஸ்காட்சுவான் பல்கலைக்கழகத்தின் விலங்கு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
சஸ்காட்சுவான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டக்லஸ் கிளார்க், இந்த மாகாணத்தில் கரடி தாக்குதலால் உயிரிழப்பு மிகவும் அரிது, இது வரலாற்றில் நான்காவது சம்பவம் என்றும் கடைசியாக 2020-ல் ஒரு பெண் உயிரிழந்தாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு வசந்த காலத்தில் உணவு பற்றாக்குறை காரணமாக கரடிகள் தங்கள் குடைகளிலிருந்து வெளியே வந்து நீண்ட தூரம் பயணம் செய்கின்றன. இதனால் மனிதர்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார்.
கரடிகள் குளிர்கால உறக்கத்திலிருந்து வெளியே வரும் இந்த காலத்தில், வெளிப்புறப் பணிகளில் ஈடுபடும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், கரடி ஸ்ப்ரே எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |