அமெரிக்காவில் இந்திய இளைஞருக்கு 15 முறை கத்திக்குத்து: அரங்கேறிய மதவெறித் தாக்குதல்
அமெரிக்காவில் வணிக வளாகத்தில் இந்தியாவை சேர்ந்த முஸ்லிம் வாலிபர் ஒருவர் 15 முறைக்கு மேல் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீ ஒரு முஸ்லிமா?
அமெரிக்காவின் உட்டாவின் வெஸ்ட் வேலி பகுதியில் அமைந்துள்ள Valley Fair Mall என்ற வணிக வளாகத்தில் உள்ள நகைக்கடையில் இந்தியாவை சேர்ந்த சோஹைல் என்ற நபர் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல அவர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, நகைக் கடைக்கு வந்த 48 வயது பீட்டர் மைக்கேல் லார்சன் என்ற நபர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
அவருக்கு தண்ணீர் எடுப்பதற்காக சோஹைல் திரும்பிய போது அவரை மைக்கேல் கத்தியால் குத்தியுள்ளார்.

மேலும் அவரிடம் நீ எந்த ஊர்? உன் அடையாளம் என்ன? என பல கேள்விகளை தாக்குதல்தாரி கேட்டுள்ளார். உடனே தான் ஒரு இந்தியன் என்றும், முஸ்லிம் என்றும் சோஹைல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தாக்குதல்தாரியான மைக்கேல் கத்தியால் பல முறை சொஹைலை குத்தியுள்ளார். இதில் அவருக்கு உடலில் 15 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளது.
அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதல்தாரியான பீட்டர் மைக்கேல் லார்சனை பொலிஸார் கைது செய்து சால்ட் லேக் கவுண்டி சிறையில் அடைத்துள்ளனர்.
மனிதநேயம் முதன்மையானது
இந்நிலையில் “சோஹைல் 2 குழந்தைகளுக்கு அப்பா, அவர் தன்னுடைய குடும்பத்திற்காக தினமும் உழைக்க கூடிய எளிய மனிதர். தாக்குதல் நடக்கும் போது நான் அந்த இடத்தில் இருந்து இருந்தால் என் உயிரை கொடுத்து கூட காப்பாற்றி இருப்பேன்.
இந்த உலகிற்கு வெறுப்பு வேண்டாம். அன்பு மட்டுமே வேண்டும். மனிதநேயமே எல்லாவற்றையும் விட முதன்மையானது” என சோஹைல் பணிபுரியும் கடையின் உரிமையாளர் அட்னான் முகமது தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |