பிரித்தானிய விதிகளை மீறிய இந்திய வம்சாவளி பெண்., நாடு கடத்தப்பட வாய்ப்பு
பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நாடு கடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வாழும் 37 வயதான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வரலாற்றறிஞர் மணிகார்னிகா தத்தா (Manikarnika Dutta), விதிகளை மீறியதாகக் கூறி நாடு கடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் விதிகளின்படி, ILR (Indefinite Leave to Remain) விண்ணப்பதாரர்கள் பிரித்தானியாவிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் 548 நாட்களுக்கு அதிகமாக வெளிநாட்டில் இருக்கக்கூடாது.
ஆனால், தத்தா 691 நாட்கள் இந்தியாவில் இருந்து, ஆய்வுகளுக்காக அருங்காட்சியகங்களை கண்டறிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அதிர்ச்சியில் மணிகார்னிகா தத்தா
மணிகார்னிகா தத்தா, பிரித்தானிய அரசின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்தார்.
“நான் பிரித்தானியாவில் 12 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். எனது வாழ்க்கையின் பெரும் பகுதி இங்கு அமைந்திருக்கிறது. இவ்வாறு நாடு கடத்தப்படும் நிலை ஏற்படும் என நான் நினைத்ததே இல்லை,” என அவர் கூறினார்.
ILR விண்ணப்பமும் மறுப்பும்
தத்தா மற்றும் அவரது கணவர் டாக்டர் சௌவிக் நஹா, 2023 அக்டோபரில் ILR விண்ணப்பித்தனர்.
டாக்டர் நஹாவின் விண்ணப்பம் ஒப்புக்கொள்ளப்பட்டபோதும், தத்தாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மேலும், நீதிமன்ற மறுபரிசீலனையும் UK Home Office நிராகரித்தது.
சட்டப்போர் தொடங்கியது
தத்தாவின் வழக்கறிஞர் நாகா கந்தையா, பிரித்தானிய அரசின் இந்த முடிவு உலகளாவிய அகாதமிக் திறமைகளை கவர்வதை பாதிக்கும் எனக் கூறி, சட்டவழியில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
"இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வுகள் தத்தாவின் ஆய்வுப் பணிக்குத் தேவையானவை. இதன் மூலம் அவர் தனது தகுதிகளை நிரூபிக்க முடிந்தது. பிரித்தானிய கல்வி உலகில் முன்னணியில் இருக்க விரும்பினால், இதுபோன்ற திறமையாளர்களை ஊக்குவிக்க வேண்டும்," என அவர் தெரிவித்துள்ளார்.
தத்தாவின் கணவர் "இந்த முடிவு எங்கள் மனநிலைக்கு பேருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என வேதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமைக்கேற்ப, Home Office இவ்வழக்கை மீண்டும் மூன்று மாதங்களில் பரிசீலிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |