ஹொட்டலில் பெண் ஊழியருக்கு தொல்லை; ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய பாரா வீரர்
indian para swimmer deported from japan after misbehave hotel staff: ஹொட்டலில் பெண் ஊழியருக்கு தொல்லை அளித்த விவகாரத்தில், இந்திய பாரா நீச்சல் வீரர் முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக், ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
பெண் ஊழியருக்கு தொல்லை அளித்த இந்திய பாரா வீரர்
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அக்டோபர் 18 முதல் 24 வரை நடைபெறுகிறது.
பாரா விளையாட்டுப் போட்டிகளுக்காக ஜப்பானுக்கு சென்றிருந்த இந்திய குழுவில், பீகாரை சேர்ந்த நீச்சல் வீரரான முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக் இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில், முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக் ஜப்பானில் பெண் ஊழியருக்கு தொல்லை அளித்ததாக கைது செய்யபட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இந்திய பாரா நீச்சல் குழுவினர் தங்கியிருந்த ஃபோர் பாயின்ட்ஸ் பை ஷெரட்டன் ஹொட்டலில், அறையை சுத்தம் செய்ய வந்த பெண் துப்புரவு பணியாளரிடம் முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக் மோசமான சைகைகள் காட்டியதோடு, முறையற்ற விதத்தில் தொட்டதாகவும் அந்த பெண் ஊழியர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்த பெண் ஊழியர் உடனடியாக வெளியே வந்து தனது மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். ஹொட்டல் நிர்வாகம் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், ஷேக் உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்
எல்லைக் கட்டுப்பாட்டுக் குழு தலையிட்டு, அந்த ஊழியரை எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோருமாறும், ஷேக் ஜப்பானை விட்டு வெளியேறுவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் இந்திய குழுவிடம் கேட்டுக்கொண்டது.
எழுத்துப்பூர்வ மன்னிப்பு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்ட ஷேக், அன்றிரவு மற்றொரு ஹொட்டலுக்கு மாற்றப்பட்டார். செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் சுமார் 2 மணியளவில் புறப்பட்ட விமானத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
40 வயதான முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக்கு வாழ்நாள் தடை விதிப்பது குறித்து இந்திய பாராலிம்பிக் குழு (பிசிஐ) பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
பார நீச்சல் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ள அவர், 2021 ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதியால் சிறந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரருக்கான விருதையும் பெற்றார்.
கோவாவின் கண்டோலிம் கடற்கரையில் 4 மணி நேரத்தில் 9 கிமீ நீந்தி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரால் திறந்த கடலில் மிக நீண்ட தூரம் நீந்துவதற்கான உலக சாதனையை படைத்தார்.