ஓமன் கடலில் சரக்கு கப்பலை தாக்கிய மர்ம பொருள்: இந்திய மாலுமி ஒருவர் உயிரிழப்பு
One Indian sailor dies after attack on ship near Oman: ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சரக்கு கப்பல் மீது தாக்குதல்
ஓமன் நாட்டிற்கு அருகில் உள்ள கடல் பகுதியில் 14 இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் மீது அடையாளம் தெரியாத மர்ம பொருள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 13 இந்திய மாலுமிகள் ஓமன் கடலோர காவல் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்திருந்த நிலையில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்து இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மர்ம தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாலுமி இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கந்தர் நஹீம் அஜிஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நவம்பர் 2ம் திகதி எம்.எஸ்.வி அல் ஜுசுஃபி என அடையாளம் காணப்பட்ட இந்த கப்பல் ஓமன் கடற்கரைக்கு அருகில் பயணித்து கொண்டிருந்த போது இந்த தாக்குதலானது நடத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் சோனோவால் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் சலாயாவை சேர்ந்த எம்.எஸ்.வி அல் ஜுசுஃபி என்ற சரக்கு கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு குஜராத்தின் போர்பந்தர் நகரை நோக்கி வந்து கொண்டிருந்த போது இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் சர்வதேச அளவில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமைகளை சீர்குலைத்துள்ளது.
இதுவரை இந்த போர் நடவடிக்கைகள் காரணமாக இந்த பிராந்தியத்தில் 14 இந்திய மாலுமிகள் உட்பட மொத்தம் 22 இந்தியர் உயிரிழந்து இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.