காப்பாற்றுங்கள்... உக்ரைன் அருகே கப்பலில் சிக்கிய 13 இந்திய மாலுமிகள்
உக்ரைன் கருங்கடல் துறைமுகத்திற்கு அருகே தொடரும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில், சரக்குக் கப்பல் ஒன்றில் குறைந்தது 13 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்கப்படலாம்
கருங்கடல் துறைமுகத்திற்கு அருகே ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால், அங்கு சிக்கியுள்ள கப்பல் ஊழியர்கள் மிக மோசமான மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழலில் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் நேரடியாகத் தாக்கப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் மாலுமிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

மேலும், இந்திய அரசு, கப்பல் உரிமையாளர்கள் மற்றும் பிற அதிகார அமைப்புகள் ஆகியவை கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யவும், அவர்களை விரைவாகத் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மோதல் மண்டலங்களில் உள்ள இந்தியக் கடல்சார் பணியாளர்கள் எளிதில் தாக்கப்படக்கூடிய இலக்குகளாக விடப்படக்கூடாது என்றும், உடனடியாக நடவடிக்கை எடுகக வேண்டும் என்றும் அந்த அமைப்பு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
துறைமுகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைச் சுட்டிக்காட்டும் வகையில், கப்பலைச் சுற்றியுள்ள பகுதியில் அடர்த்தியான புகை மண்டலம் எழுவதைக் காட்டும் காணொளி ஒன்றையும் மாலுமிகள் சங்கம் வெளியிட்டுள்ளது; இக்காணொளி அக்கப்பலிலிருந்தே பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
13 இந்திய மாலுமிகள் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்த தகவல்களுக்கு, இதுவரை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகமோ அல்லது கப்பல் நிறுவனமோ எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உதவிக்கான அழைப்பு
உக்ரைனின் தெற்கு கடற்கரைப் பகுதியில் இயங்கும் சரக்குக் கப்பல்கள் மீது சமீபத்திய நாட்களில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்திய மாலுமிகளிடம் இருந்து சமீபத்திய உதவிக்கான அழைப்பு வந்துள்ளது.

கடந்த வாரம் கருங்கடலில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, உக்ரைன் தூதர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக்கை திங்களன்று வரவழைத்த இந்தியா தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது.
அச்சம்பவம் குறித்து இந்தியாவின் தீவிர கவலையைத் தூதரிடம் தெரிவித்ததாகவும், வணிகக் கப்பல் போக்குவரத்து மீதான இத்தகைய தாக்குதல்களை மிகக் கடுமையாகக் கண்டிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |