கனடாவில் பிக்கப் டிரக் மோதி உயிரிழந்த இந்திய மாணவர்: வெளியான முழு விவரம்
கனடாவில் பிக்கப் டிரக் மோதி உயிரிழந்த இந்திய மாணவர் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், ரொறண்ரோ நகரத்தில், சைக்கிளில் சாலையைக் கடக்கும்போது பிக்கப் டிரக் மோதி இழுத்துச் செல்லப்பட்டதில் 20 வயது இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததார்.
பாதிக்கப்பட்டவரை உள்ளூர் காவல்துறை இன்னும் அடையாளம் காணவில்லை என்றாலும், கனடாவின் cbc செய்தி இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் உயிரிழந்தவர் கார்த்திக் சைனி என அவரது உறவினர் பர்வீன் சைனியால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Twitter @REDFMToronto
தகவல்களின்படி, கார்த்திக் சைனி இந்தியாவில் இருந்து ஆகஸ்ட் 2021-ல் கனடாவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்
கார்த்தி சைனி இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் கர்னால் பகுதியைச் சேர்ந்தவர் என பர்வீன் சைனி கூறினார்.
கார்த்திக்கின் உடல் முறையான அடக்கம் செய்வதற்காக விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்று அவரது குடும்பத்தினர் நம்புகிறார்கள் என்று பர்வீன் கூறினார்.
கார்த்திக் ரொறண்ரோ நகரத்தில் உள்ள மாணவர் என்பதை அவர் பயிலும் ஷெரிடன் கல்லூரி உறுதி செய்துள்ளது.
கார்த்திக்கின் திடீர் மரணத்தால் எங்கள் சமூகம் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக நண்பர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கல்லூரி தெரிவித்துள்ளது.
நடந்தது என்ன?
பொலிஸாரின் கூற்றுப்படி, புதன்கிழமை மாலை சுமார் 4:30 மணியளவில் யோங்கே தெரு மற்றும் செயின்ட் கிளேர் அவென்யூ சந்திப்பில் இந்த பயங்கர மோதல் ஏற்பட்டது.
மிட் டவுனில் ஒரு பிக்கப் டிரக் மோதி இழுத்துச் செல்லப்பட்டதில் சைக்கிள் ஓட்டுநர் இறந்ததாக வியாழக்கிழமை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர சேவையினர் சைக்கிள் ஓட்டுநரை விடுவித்து அவரை உயிர்ப்பிக்க முயன்றனர், ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக ரொறன்ரோ பொலிஸ் தெரிவித்துள்ளது.
கார்த்திக்கின் நினைவாக சைக்கிள் சவாரி
இதற்கிடையில், மோதல் நடந்த இடத்தில் தற்காலிக நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
அட்வகேசி ஃபார் ரெஸ்பெக்ட் ஃபார் சைக்லிஸ்ட்ஸ் என்ற குழு நவம்பர் 30 அன்று கார்த்திக்கின் நினைவாக ஒரு சைக்கிள் சவாரிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
பங்கேற்பாளர்கள் புளூர் தெரு மற்றும் ஸ்பாடினா அவென்யூவில் உள்ள மாட் கோஹன் பூங்காவில் சந்திப்பார்கள். விபத்து நடந்த இடத்தில் ஒரு சைக்கிளை (ghost bike) வைப்பதன் மூலம் சவாரி முடிவடையும்.