வெளிநாட்டில் கொத்தடிமையாக்கப்பட்டு கொடூர சித்திரவதைக்கு உள்ளான இந்திய மாணவர்: பகீர் பின்னணி
அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் பல மாதங்களாக சிறைவைக்கப்பட்டு, கழிவறைக்கு கூட அனுமதிக்காமல் சித்திரவதைக்கு இலக்கான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மனசாட்சி இல்லாத செயல்
20 வயதேயான அந்த மாணவரை அமெரிக்க அதிகாரிகள் தற்போது மீட்டுள்ளதுடன், அவரது உறவினர் ஒருவருடன் மூவரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மாணவனுக்கு இழைக்கப்பட்டது மனிதாபிமானமற்ற, மனசாட்சியே இல்லாத செயல் என குறிப்பிட்டுள்ளனர். சட்ட காரணங்களுக்காக பெயர் வெளியிடப்படாத அந்த மாணவர், அமெரிக்க மாகாணமான மிசோரியில் மூன்று குடியிருப்புகளில் சிக்கி பல மாதங்கள் கொடுமைகளை அனுபவித்துள்ளார்.
இந்த வழக்கில் தற்போது வெங்கடேஷ், ஸ்ரவன் வர்மா மற்றும் நிகில் வர்மா ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர். மாணவரின் நிலை கண்டு பொதுமக்களில் ஒருவரே 911 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் அளித்துள்ளார்.
அந்த மாணவர் தற்போது பாதுகாப்பாக உள்ளார் என்றும் பல எலும்பு முறிவுகள் மற்றும் அவரது முழு உடம்பிலும் காயங்கள் காணப்படுவதாகவும் இதனால் காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மூவரும் செல்வந்தர்கள்
ஏழு மாதங்களுக்கும் மேலாக, அந்த நபர்கள் மாணவனை ஒரு குடியிருப்பின் அடித்தளத்தில் அடைத்து, கழிவறைக்கு கூட அனுமதிக்காமல் தரையில் தூங்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
மட்டுமின்றி, கொடூரமாக தாக்கவும் செய்துள்ளனர். தினசரி 3 மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதித்துள்ளனர். கைதான மூவரின் வீட்டு வேலைகள் அனைத்தையும் அந்த மாணவனே செய்து முடிக்க வேண்டும்.
தவறிழைத்தால் நிர்வாணப்படுத்தி, கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், கைதான மூவரும் செல்வந்தர்கள் மட்டுமின்றி, இந்தியாவில் அரசியல் தொடர்பு கொண்டவர்கள் எனவும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |