இணையத்தில் சிறுமிகளுக்கு சீண்டல் - இந்திய மாணவருக்கு பிரித்தானியாவில் 30 ஆண்டுகள் சிறை
indian student Bilal Kazi jailed for 30 years in uk for grooming girls online: இணையத்தில் சிறுமிகளின் தனிப்பட்ட புகைப்படங்களை பெற்று அவர்களை மிரட்டிய, இந்திய மாணவருக்கு பிரித்தானியாவில் 30 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவருக்கு பிரித்தானியாவில் 30 ஆண்டுகள் சிறை
பிரித்தானியாவின் பர்மிங்காமைச் சேர்ந்த 27 வயது இந்தியரான பிலால் காஷி (Bilal Kazi), சமூக ஊடகங்கங்கள் மூலமாக சிறுமிகளை சுரண்டிய குற்றச்சாட்டில், செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

10 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் நம்பிக்கையை வளர்ப்பதற்காக, பிலால் காஷி சமூக ஊடகங்ககளில் ஒரு பதின்வயதுச் சிறுவனாக நடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் 13 வயது சிறுமி ஒருவரிடம் காசி தானும் அதே வயதுதான் எனக்கூறி ஸ்நாப்சேட் செயலியில் பேசத்தொடங்கியுள்ளார்.
அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி, அவரிடமிருந்து தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் அனுப்ப மறுத்த போது, இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்வேன் என மிரட்டியதால் கட்டாயத்தின் பேரில் அதனை அனுப்பியுள்ளார்.
அதன் பின்னர், அந்த சிறுமியின் செயலி ஹேக் செய்யப்பட்டு புகைப்படங்கள் பரவிய நிலையில், அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பின்னர் இந்த சம்பவம் வெளியே வந்துள்ளது.
இதே போல், 170க்கும் அதிகமானோரை காஷி ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்றதோடு, அனுப்ப மறுத்தால் அதனை வெளியிட்டுவிட்டேன் என மிரட்டி பணம் பறித்துள்ளது தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் காஷியின் கைபேசியிலிருந்து 400க்கும் மேற்பட்ட தனிப்பட்ட படங்களையும், காணொளிகளையும் மீட்டெடுத்தனர்.
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசு தரப்பு வழக்கறிஞர் Martin McRobb, "பிலால் காசி, ஏராளமான பாதிக்கப்படக்கூடிய இளம் சிறுமிகளைத் தன் வசப்படுத்தி, கையாண்டு, சுரண்டுவதில் முழுமையான ஈவிரக்கமற்றுச் செயல்பட்டார்.
பதின்ம வயது சிறுவன் போல் நடித்தால் பல பெண்கள் தாங்கள் உண்மையான உறவில் இருப்பதாக நம்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தபோது, இயல்பாகவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். மேலும், அவர்களில் சிலர் கடுமையான மற்றும் நீண்டகால மன அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்," என்று தெரிவித்துள்ளார்.
"காஸியைப் போல, ஒரு திரைக்குப் பின்னால் ஒளிந்துகொள்வது தங்களை அடையாளம் தெரியாதவர்களாகவும், யாராலும் தொட முடியாதவர்களாகவும் ஆக்கிவிடும் என்று நம்புபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும்," என்று காவல்துறையின் துப்பறியும் சார்ஜென்ட் Ross Peel கூறினார்.