அயர்லாந்தில் இந்திய சாரதி மீது இனவெறித் தாக்குதல்: உதவ யாருமின்றி தவித்த தருணம்
அயர்லாந்தில் இந்திய சாரதி ஒருவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தனக்கு உதவ யாருமின்றி தவித்ததாக அவர் தெரிவித்துள்ள விடயம் கவலையை உருவாக்கியுள்ளது.
இந்திய சாரதி மீது இனவெறித் தாக்குதல்
அயர்லாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் லக்வீர் சிங், 10 ஆண்டுகளாக டெக்சி சாரதியாக பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில், இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 1ஆம் திகதி, சிங்குடைய டெக்சியில் சுமார் 20, 21 வயதுடைய இரண்டு இளைஞர்கள் ஏறியிருக்கிறார்கள்.
Poppintree என்னுமிடத்தில் அவர்களை சிங் இறக்கிவிட்டதும், சாரதியின் கதவைத் திறந்து போத்தல் ஒன்றினால் அவருடைய தலையில் தாக்கியிருக்கிறார்கள் அவர்கள்.
உன் சொந்த நாட்டுக்கு ஓடிப்போ என கத்திவிட்டு அங்கிருந்து ஓடி மறைந்திருக்கிறார்கள் அவர்கள்.
தலையிலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட அக்கம்பக்கத்து வீடுகளில் சென்று உதவி கேட்டும் தனக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்கிறார் சிங்.
பின்னர் அவசர உதவியை அவர் அழைக்க, பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் வந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
இந்த சம்பவத்தால் அச்சத்தில் ஆழ்ந்துள்ள சிங், இனி தன்னால் சாரதியாக பணி செய்ய முடியாது என்கிறார். தான் தாக்கப்பட்டதால் தன் பிள்ளைகளும் பயந்துபோயிருக்கிறார்கள் என்கிறார் அவர்.
கடந்த இரண்டு வாரங்களில் இந்திய வம்சாவளியினர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்படுவது, இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |