HIV குறித்த விழிப்புணர்வு; 191 நாடுகளை மிதிவண்டியில் சுற்றிய இந்தியர்
indian travelled 191 countries by bicycle for hiv awareness: HIV குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கு வங்கத்தை சேர்ந்த சோமன் தேப்நாத் தனது மிதிவண்டியில் 191 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
HIV குறித்த விழிப்புணர்வு
இந்தியாவின் மேற்குவங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த சோமன் தேப்நாத், தனது 14 வயதில் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம் HIV/AIDS குறித்து அறிந்து கொள்ள தூண்டியது. தனது 20 வயது வரை உள்ளூரில் HIV குறித்து விழிப்புணர்வுகளை மேற்கொண்டார்.

HIV குறித்து விழிப்புணர்வுக்காக 2004, மே 27 அன்று தனது மிதிவண்டி மூலம், இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 5யூனியன் பிரதேசங்கள் அனைத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பயணத்தை தொடங்கினார்.
இந்த் பயணத்தில், டெல்லியை அடைந்தபோது, அப்போதைய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இந்தப் பயணத்தின் காரணமாக, அவருக்கு 5 நாடுகளுக்கான விசாக்கள், ரூ.50,000 ரொக்கம் மற்றும் அறிமுகக் கடிதங்களும் கிடைத்தன.
191 நாடுகளுக்கு மிதிவண்டியில் பயணம்
இதனையடுத்து சர்வதேச பயணத்தை தொடங்கிய அவர், மிதிவண்டி மூலம் 191 நாடுகளை சுற்றி வந்துள்ளார்.
2004 முதல் 2009 வரை, தேப்நாத் நேபாளம், திபெத், சீனா, பூட்டான், பங்களாதேஷ், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் இலங்கை உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் பயணம் செய்தார்.

அவருடைய பயணம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், ஈரான், துருக்கி, ஜார்ஜியா மற்றும் பல்கேரியா வழியாகவும் சென்றது.
2009 முதல் 2012 வரை, அவர் ஐரோப்பாவில் 48 நாடுகளுக்கும், ஆப்பிரிக்காவில் 54 நாடுகளுக்கும், மத்திய கிழக்கில் 10 நாடுகளுக்கும் பயணம் செய்தார்.
2015 முதல் 2017 வரை, தென் அமெரிக்காவில் உள்ள 13 நாடுகளுக்கும், 2018 ஆம் ஆண்டில் கரீபியன் தீவுகளுக்கும், மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளுக்கும் பயணம் செய்தார்.
2019-20ல், அவர் அமெரிக்காவில் உள்ள 48 மாகாணங்களுக்கும், பின்னர் கனடாவுக்கும் பயணம் செய்தார். இந்தக் காலகட்டத்தில், அவர் ரஷ்யா மற்றும் சீனாவுக்கும் சென்றிருந்தார்.
கொரோனா தொற்று பரவிய காலத்தில் சீனாவில் இருந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர்சில நாட்களுக்கு அவரால் சாப்பிடக்கூட முடியாத நிலையில் இருந்தார்.
அதிலிருந்து மீண்டு, மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்த சோமன் தேப்நாத், அங்கிருந்து தென் கொரியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார்.
இந்த பயணத்தில், சுமார் 2,00,000 கிமீ தூரத்தை தனது மிதிவண்டி மூலம் கடந்துள்ளார்.
தற்போது 'புனர் மிலன் பாரத்' என்ற பெயரில் நாடு தழுவிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அவர், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கும், துவாரகாவிலிருந்து காமாக்யாவிற்கும், அருணாச்சல பிரதேசத்திலிருந்து மிசோரம் வரையும் மிதிவண்டியில் பயணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவது, 'ஒரு மரம், ஒரு உயிர்' என்ற செய்தியின் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்துவது ஆகியவையே இந்த சுற்றுப்பயணத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு சுமார் 70-80 கிலோமீட்டர் மிதிவண்டிப் பயணம் மேற்கொள்ளும் அவர், சில சமயங்களில் 150 கிமீ செல்கிறார். இதனால் கால் வலி ஏற்பட்ட காரணத்தால் பயண வேகத்தை குறைத்து கொண்டுள்ளார்.