ஐக்கிய அரபு எமிரேட்ஸ் லொட்டரியில் ரூ.240 கோடியை வென்ற இந்தியர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ரூ.240 கோடி லொட்டரி ஜாக்பாட்டை வென்ற இந்தியர் இவர் தான்.
யார் அவர்?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் லொட்டரியின் முதல் 100 மில்லியன் திர்ஹம்ஸ் (சுமார் ரூ. 240 கோடி) ஜாக்பாட்டை வென்றவராக அனில்குமார் பொல்லா என்ற இந்தியர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய லாட்டரி பரிசை அவர் பெற்றுள்ளார். பரிசை உறுதிசெய்த பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் லாட்டரி இது "யுஏஇயின் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிலப்பரப்புக்கு ஒரு வரலாற்று மைல்கல்" என்று கூறியது.
அனில்குமார் பொல்லா (வயது 29), அபுதாபி நகரில் வசிப்பவர். இவர் கடந்த ஒன்றரை வருடங்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லொட்டரி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இவர் டிக்கெட்டுகளை வாங்கி வந்துள்ளார். தீபாவளிக்கு முந்தைய நாள் லொட்டரியை பொல்லா வென்றது அவருக்கு இன்னும் சிறப்பு வாய்ந்தது.
இது குறித்து அவர் கூறும் போது, "நான் என் அம்மாவுக்காக லொட்டரி டிக்கெட் எண் 11 ஐத் தேர்ந்தெடுத்தேன். அது இந்த வெற்றிக்கு முக்கியமாக மாறும் என்று எனக்குத் தெரியாது.

இந்தத் தொகை என் வாழ்க்கையை என்றென்றும் மாற்றிவிடும். முதலில் ஒரு சூப்பர் கார் வாங்கி ஏழு நட்சத்திர ஹோட்டலில் ஒரு மாதம் தங்க திட்டமிட்டுள்ளேன். முழுத் தொகையையும் வீணாக்க மாட்டேன்.
இந்தப் பணத்தை எவ்வாறு புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது என்பதை கவனமாகத் திட்டமிட நான் நேரம் எடுத்துக்கொள்வேன்" என்றார்.
UAE லாட்டரி சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பொல்லா தனது குடும்பத்தை UAEக்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கூறினார்.
மேலும், அந்தத் தொகையில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்க விரும்புவதாகவும், அதுவே தனது மகிழ்ச்சியின் மையமாக இருக்கும் என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |