இந்திய கடவுச்சீட்டை அங்கீகரிக்க சீனா மறுப்பு: ஷாங்காய் விமான நிலையத்தில் துன்புறுத்தப்பட்ட பெண்
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஷாங்காய் விமான நிலையத்தில் சீன அதிகாரிகள் தன்னை தடுத்து வைத்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
18 மணி நேரம்
இணைப்பு விமானத்திற்கான நிறுத்தத்தின் போது தனது இந்திய கடவுச்சீட்டை சீன அதிகாரிகள் அங்கீகரிக்க மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 21 அன்று ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் தன்னை 18 மணி நேரம் தடுத்து வைத்ததாக பெமா வாங் தோங்டாக் என்பவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவரது பிறந்த மாகாணமான அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்பதால், தற்போது அவர் வசமிருக்கும் இந்திய கடவுச்சீட்டை அங்கீகரிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.
சம்பவத்தன்று லண்டனில் இருந்து ஜப்பான் செல்லும் வழியில் மூன்று மணி நேரம் ஷாங்காய் விமான நிலையத்தில், இணைப்பு விமானத்திற்காக தரையிறங்கிய நிலையிலேயே சீன அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
விசாரணை என 18 மணி நேரம் ஷாங்காய் விமான நிலையத்தில் தம்மை அவர்கள் தடுத்து வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, குடிவரவு அதிகாரிகள் பலரும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் அவரை அவமதித்து கேலி செய்ததாகவும்,
அவர் சீன கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளனர். அவருக்கு உணவு, விமான நிலைய வசதிகள் மற்றும் அவருடைய நிலை குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்திய தூதரகம்
ஜப்பான் புறப்பட முன்பதிவு செய்யப்பட்ட விமானத்தை அவர்கள் திட்டமிட்டே தவறவிட வைத்ததாகவும், பின்னர் புதிதாக ஜப்பானுக்கான பயணச்சீட்டு வாங்கும் நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தவறவிட்ட விமானம் மற்றும் ஹொட்டல் முன்பதிவுகளால் நிதி இழப்பும் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, பிரித்தானியாவில் உள்ள ஒரு நண்பர் மூலம் ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
தூதரக தலையீட்டால், இறுதியாக இரவில் தாமதமாக விமான நிலையத்தை விட்டு வெளியேறி தனது பயணத்தை மீண்டும் தொடங்க முடிந்தது.
இந்த சம்பவத்தை இந்தியாவின் இறையாண்மைக்கு ஏற்பட்ட நேரடி அவமானம் என்று கூற வேண்டும் என இந்தியாவின் பிரதமர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |