தன் குழந்தையை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல விரும்பும் இந்தியப் பெண்... மறுத்த கனேடிய நீதிமன்றம் கூறும் காரணம்
இந்தியப் பெண் ஒருவர் கனேடிய குடிமகளான தன் மகளை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல விரும்பும் நிலையில், அவரது கோரிக்கைக்கு ஒன்ராறியோ உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு திருமணமான அந்த இந்திய தம்பதி கனடா வந்த நிலையில், 2020ஆம் ஆண்டு அந்தப் பெண் ஒரு குழந்தைக்கு தாயான பிறகு இருவரும் பிரிந்துள்ளனர்.
தற்போது, Gurleen Waraich என்னும் தன் மகளை ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு, தான் இந்தியா கொண்டு செல்ல விரும்புவதாக அந்தப் பெண் தெரிவிக்க, குழந்தையின் தந்தை அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
அந்தப் பெண் 12ஆம் வகுப்புதான் படித்திருக்கிறார். அவர் கனடாவில் வேலை எதுவும் பார்க்கவில்லை. அவர் கனடா வருவதற்கே அவரது கணவர்தான் ஸ்பான்சர் செய்திருக்கிறார். அப்படியிருக்கும் நிலையில், தன் மகளுடன் அவர் இந்திய சென்றால், அவர் மீண்டும் கனடாவுக்குத் திரும்பி வரமாட்டார் என்று கூறுகிறார் Gurleenஇன் தந்தை.
அத்துடன், தன் மகள் மிகவும் சிறுபிள்ளை என்றும், அவள் இன்னமும் கொரோனா தடுப்பூசியும் பெறவில்லை என்றும், அதனால் அவள் இந்தியா சென்றால், அவளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வாதிடுகிறார் அவர்.
மேலும், வாரத்தில் ஒரு நாள், மூன்று மணி நேரம் தான் தன் பிள்ளையுடன் செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நேரத்தை தான் அதிகரிக்கும்படி கோர இருக்கும் நிலையில் குழந்தையின் தாய் அவளை இந்தியா கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த குழந்தையின் தாயோ, ஒருவேளை தான் இந்தியாவிலிருந்து திரும்பி வரத் தவறினால், கனடா Hague ஒப்பந்தத்தின்படி தன் மகளை கனடா கொண்டுவர முயற்சிக்கலாம் என்ற வாதத்தை முன்வைத்தார்.
ஆனால் அவரது வாதத்தை ஏற்க மறுத்த ஒன்ராறியோ உச்ச நீதிமன்றம், கனடாவுடனான அந்தப் பெண்ணின் தொடர்புகள் வலுவாக இல்லையென்றும், அவர் கனடாவில் வேலை பார்க்கவும் இல்லை, அவருக்கு கனடாவில் சொத்துக்களோ அல்லது குடும்பமோ இல்லை என்றும் கூறி அவரது வாதத்தைத் தள்ளுபடி செய்தது.
மேலும், இந்தியா Hague ஒப்பந்தத்தின் கீழ் வரவில்லை என்று கூறியுள்ள நீதிபதி, அதனால் அவரது வாதம் அர்த்தமற்றது என்றும், அந்தப் பெண் இந்தியா செல்வதாகக் கூறினாலும், அவர் இந்தியாவில் எங்கு தங்கப்போகிறார், எவ்வளவு நாட்கள் தங்கப்போகிறார் என்பதைக் குறித்த எந்த விவரஙங்களையும் அளிக்கவில்லை என்றும் கூறி, அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.