ட்ரம்பைக் கடத்தி கொலை செய்யத் துணிந்த இந்தியானா பெண்
ஜனாதிபதி ட்ரம்பிற்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு நியூயார்க்கிலிருந்து வாஷிங்டனுக்கு பயணம் செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிருக்கு அச்சுறுத்தல்
இந்தியானாவைச் சேர்ந்த 50 வயது நதாலி ரோஸ் ஜோன்ஸ் என்பவரே சனிக்கிழமை தலைநகர் வாஷிங்டனில் கைது செய்யப்பட்டார். வெள்ளை மாளிகைக்கு வெளியே நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், அவரது அச்சுறுத்தல்கள் தொடர்பான இரண்டு குற்றச் செயல்களுக்கு அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ட்ரம்ப் ஆதரவாளரும் சட்டத்தரணியுமான ஜீனைன் பிரோ திங்களன்று அந்தப் பெண்ணின் கைதை அறிவித்ததுடன், சட்டத்தின் முழு அளவிற்கும் அவர் மீது வழக்குத் தொடரப்படும் என்றும் சபதம் செய்தார்.
ஜனாதிபதி ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பது மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்று என குறிப்பிட்டுள்ள அவர், சட்டத்தின் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி உரிய தண்டனை வாங்கித்தர முயற்சி முன்னெடுக்கப்படும் என்றார்.
ட்ரம்பை பழிவாங்க
வெளியான தகவலின் அடிப்படையில், தனது சமூக ஊடகத்தில் தொடர்ந்து ட்ரம்பிற்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளதுடன், அதற்காக உயிரை விடவும் தயார் எனவும் பதிவு செய்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்றின் போது அமெரிக்காவில் ஏற்பட்ட இறப்புகளுக்காக ட்ரம்பை பழிவாங்க இருப்பதாகவும், தடுப்பூசிகள் குறித்த ட்ரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடுதான் இவ்வளவு பேரின் இறப்புகளுக்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆனால் கைது செய்யப்பட்ட போது ஜனாதிபதிக்கு தீங்கு விளைவிக்கும் எந்த விருப்பமும் தனக்கு இல்லை என்று ஜோன்ஸ் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |