ஐரோப்பிய நாடொன்றில் தாக்குதலுக்கு இலக்காகும் இந்தியர்கள்... ஒரே மாதத்தில் 6 சம்பவம்
ஐரோப்பிய தீவு நாடான அயர்லாந்தில் வெறுப்பு தொடர்பான தாக்குதல்களில் பல இந்தியர்கள் படுகாயமடைந்துள்ள சம்பவம் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விட்டு வெளியேறி
குறித்த வன்முறை சம்பவங்களை நாட்டின் ஜனாதிபதி மைக்கேல் டி. ஹிக்கின்ஸ் கடுமையாக கண்டித்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவங்கள் அருவருப்பானவை, அயர்லாந்தின் மதிப்புகளுக்கு எதிரானவை, இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அயர்லாந்து நகரங்களான டப்ளின், க்ளோண்டால்கின், பாலிமுன் மற்றும் வாட்டர்ஃபோர்டில் சுமார் ஒரு மாதத்தில் 6 வெவ்வேறு நிகழ்வுகளில் இந்திய குடிமக்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
வெளியான தகவலின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்கள் படுகாயங்களுடன் தப்பியுள்ளனர் என்றே கூறப்படுகிறது. அப்பாவி சிறார்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், இனவாத துஸ்பிரயோகமும் நடந்துள்ளது.
நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதால், பல இந்தியர்களும் ஆசிய நாட்டவர்களும் அயர்லாந்தை விட்டு வெளியேறி பிற ஐரோப்பிய நாடுகளில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
வெளியானத் தகவல்களின் அடிப்படையில் இந்தியர்கள் மீதான தாக்குதல்களில் ஆளும் வலதுசாரி அரசாங்கமும் இடதுசாரி எதிர்க்கட்சியும் பெரும் பங்கைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையின்மை மற்றும் வீட்டுவசதி நெருக்கடிக்கு இந்தியர்களைக் குறை கூறுகின்றனர், இதன் காரணமாக தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
மதிப்புகளுக்கு எதிரானது
ஆனால் இந்திய சமூகத்தின் பங்களிப்பை ஜனாதிபதி மைக்கேல் டி. ஹிக்கின்ஸ் வெகுவாக பாராட்டியுள்ளதுடன், மருத்துவம், செவிலியர், கலாச்சாரம், வணிகம் மற்றும் நிறுவனங்களில் இந்தியர்களின் பங்கு அயர்லாந்தை வளப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
வன்முறை நம்மை பலவீனப்படுத்ம் என்று குறிப்பிட்டுள்ள அவர், சமூக ஊடகங்களில் வெறுப்பு அல்லது வன்முறையைத் தூண்டும் செய்திகளையும் கண்டித்துள்ளார். மேலும் அது விருந்தோம்பல், நட்பு மற்றும் பிறர் மீதான அக்கறை போன்ற அயர்லாந்தின் மதிப்புகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்திய சமூக மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், வெறிச்சோடிய இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து, கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் டப்ளினில் உள்ள இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.
மொத்தம் 5.38 மில்லியன் மக்கள்தொகை கொண்ட அயர்லாந்தில் 1.25 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்தோர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |