5 மில்லியன் தடுப்பூசிகளை அதிவேகத்தில் செலுத்திய நாடு! உலகளவில் இந்தியா புதிய சாதனை
உலகிலேயே மூன்றே வாரங்களில் 5 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்தியா கடந்த ஜனவரி 16-ஆம் திகதி 300 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் மிகப் பெரிய திட்டத்தை தொடங்கியது.
அதிக ஆபத்து உடைய முன்னுரிமை குழுக்களான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற முன்னணி தொழிலாளர்கள் கொண்ட 30 மில்லியன் சுகாதார பணியாளர்கள் மற்றும் அவர்களைத் தொடர்ந்து 50 வயதிற்கு மேற்பட்ட 270 மில்லியன் மக்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், உலகிலேயே 5 மில்லியன் மக்களுக்கு 21 நாட்களின் தடுப்பூசி வழங்கி முதல் நாடாக இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளதாக இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை 1,04,781 அமர்வுகள் மூலம் மொத்தம் 5,290,474 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே 5 மில்லியன் தடுப்பூசி இலக்கை அடைய மிக வேகமாக தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்திவரும் அமெரிக்காவுக்கு 24 நாட்களும், பிரித்தானியாவுக்கு 43 நாட்களும், இஸ்ரேலுக்கு 45 நாட்களும் ஆனது குறிப்பிடத்தக்கது.