IndiGo நிறுவனத்திற்கு ரூ 22 கோடி அபராதம் விதிப்பு: DGCA அதிரடி நடவடிக்கை
இந்தியாவின் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்டிகோ விமான சேவை நிறுவனம் மீது ரூ 22.2 கோடி பெரும் அபராதம் விதித்துள்ளது.
பயணிகள் பாதிக்கப்பட்டதாக
டிசம்பர் மாதம் இந்தியா முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 3 மற்றும் 5 ஆகிய திகதிகளுக்கு இடையில் அந்த நிறுவனம் 2,507 விமானங்களை ரத்து செய்ததாகவும், 1,852 விமானங்களைத் தாமதப்படுத்தியதாகவும் DGCA அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும் தாமதமானதாலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் பலர் விமான நிலையங்களில் தவித்ததாகவும் DGCA அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
DGCA விதித்துள்ள அபராதமானது இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அமைப்புரீதியான தவறுகளுக்கு ரூ. 1.80 கோடி அபராதமும், தொடர்ச்சியான விதிமீறல் கொள்கைக்காக ரூ. 20.40 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டு, மொத்த அபராதம் ரூ. 22.20 கோடியாகிறது.
IndiGo நிறுவனத்தின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால், டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் பல இடங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இதன் தாக்கம் காணப்பட்டது.

வங்கி உத்தரவாதம்
மேற்கூறிய அபராதத்துடன், வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதையும் நீண்டகால அமைப்புரீதியான திருத்தத்தையும் உறுதி செய்வதற்காக, இண்டிகோ நிறுவனம் டிஜிசிஏ-க்கு ஆதரவாக ரூ 50 கோடி வங்கி உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) என்பது பயணிகள் விமானப் போக்குவரத்திற்கான முதன்மை ஒழுங்குமுறை ஆணையமாகும்.

விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்தல், தரநிலைகளை நிர்ணயித்தல், விமானிகளுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் தொடர்புடைய விமானப் பணியாளர்களுக்கு உரிமம் வழங்குதல் ஆகியவை இதன் பொறுப்புகளில் அடங்கும்.
இண்டிகோ நிறுவனத்தின் முந்தைய விமான ரத்து நடவடிக்கைகள் நாடு முழுவதும் உள்ள பயணிகளைப் பெரிதும் பாதித்தன.
பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், தொடர்ச்சியான தாமதங்களாலும், ஏராளமான மக்கள் விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |