இந்தோனேசியாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி பீதியில் மக்கள்
இந்தோனேசியாவின் வடக்கு மொலுக்கா கடல் பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 35 கிலோமீற்றர் ஆழத்தில் நிகழ்ந்ததாகவும்; இதன் மையப்பகுதி, இந்தோனேசியாவின் டெர்னேட்டாவிற்கு மேற்கு-வடமேற்கே 127 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்ததாகவும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவின் கடலோரப் பகுதிகளில், நிலநடுக்க மையத்திலிருந்து 1,000 கிலோமீற்றர் சுற்றளவிற்குச் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கச் சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியக் கடற்கரையின் சில பகுதிகளில், அலைமட்டத்திற்கு மேல் 0.3 மீற்றர் முதல் 1 மீற்றர் (3.2 அடி) உயரம் வரை எட்டக்கூடிய சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, குவாம், ஜப்பான், மலேசியா, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் கடற்கரைகளில், அலைமட்டத்திலிருந்து 30 சென்டிமீற்றருக்கும் குறைவான உயரத்திலான அலைகள் உருவாகும் என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு கணித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது ஆரம்பத்தில் 7.8 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதனிடையே, ஜப்பானின் கடலோரப் பகுதிகளில் கடல் மட்டத்தில் லேசான மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும்,
ஆனால் சுனாமி பாதிப்புகள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்றும் ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அவுஸ்திரேலியப் பெருநிலப்பரப்பு, தீவுகள் அல்லது பிரதேசங்களுக்குச் சுனாமி அச்சுறுத்தல் ஏதுமில்லை என்று அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
280 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா, முக்கிய நிலநடுக்கப் பிளவுகளின் மீது அமைந்துள்ளது.

நெருப்பு வளையம்
மேலும், பசிபிக் வடிநிலத்தில் அமைந்துள்ள எரிமலைகள் மற்றும் நெருப்பு வளையத்தில் (Ring of Fire) அமைந்திருப்பதன் காரணமாக, இந்தோனேசியா அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் தாக்கப்படுகிறது.
2022-ஆம் ஆண்டில், மேற்கு ஜாவாவின் சியான்ஜூர் நகரில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் குறைந்தது 602 பேரின் உயிரைப் பறித்தது. 2018-ஆம் ஆண்டில் சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆகியவற்றால் 4,300-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தது, இந்தோனேசியாவில் நடந்த மிகக் கொடிய சம்பவமாகும்.

2004-ஆம் ஆண்டில், இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட மிகத் தீவிரமான நிலநடுக்கம் ஒன்று, மிக மோசமான சுனாமியைத் தூண்டிவிட்டு, பன்னிரண்டு நாடுகளில் 230,000-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பலிகொண்டது; இவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |