பெரும் விவாதங்களுக்கு மத்தியில்... முதல் விமானம் தாங்கி கப்பலைப் பெறும் இந்தோனேசியா
Indonesia gets its first aircraft carrier: இந்தோனேசியா தனது முதல் விமானம் தாங்கி கப்பலைப் பெறுகிறது.
இந்தோனேசியா தனது முதல் விமானம் தாங்கி கப்பலைப் பெற்றுள்ளது. இது ஒரு முன்னாள் இத்தாலிய போர்க்கப்பலாகும். இக்கப்பல் இந்தோனேசியாவின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்புத் திறன்களை வலுப்படுத்தும் என்று அந்நாட்டு அரசு கூறுகிறது.
பாதுகாப்பு உறவுகளை
குறுகிய தூரத்தில் புறப்பட்டு செங்குத்தாகத் தரையிறங்கும் திறன் கொண்ட விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களைக் கையாளும் வசதி கொண்ட, 41 வருடங்கள் பழமையான முன்னாள் 'ஐடிஎஸ் ஜியுசெப்பே கரிபால்டி' (ITS Giuseppe Garibaldi) கப்பல்,
வெள்ளிக்கிழமை காலை வடக்கு ஜகார்த்தாவின் தஞ்சங் பிரியோக் துறைமுகத்தில் உள்ள கடற்படைத் தளத்தை வந்தடைந்தது; அங்கு அதற்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவுடனான தனது பரந்த அளவிலான பாதுகாப்புத் துறை உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், 2024-இல் சேவையிலிருந்து விலக்கப்பட்ட அந்த விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்தோனேசியாவிடம் வழங்க இத்தாலி கடந்த மார்ச் மாதம் ஒப்புக்கொண்டது.
மேலும், இத்தாலி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மீதான ஒப்பந்தங்களை நாடி வரும் நிலையில், அந்த விமானம் தாங்கிக் கப்பலை இந்தோனேசியாவுக்குப் பரிசாக வழங்குவது, அக்கப்பலைச் சேவையிலிருந்து விலக்குவதற்கான செலவையும் மிச்சப்படுத்துகிறது.
இந்த பரிமாற்றத்தின் மூலம், தென்கிழக்கு ஆசியாவில் தனது கப்பல் தொகுப்பில் ஒரு விமானம் தாங்கி கப்பலைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தோனேசியா திகழும்.
முதலாவது தாய்லாந்தின் HTMS சக்ரி நருபெட் ஆகும், இது விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயங்கக்கூடிய AV-8S மட்டடோர் ஜம்ப்-ஜெட்களுடன் ஸ்பெயினிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பின்னர் 1997-ல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

14-ஆம் நூற்றாண்டின் மஜாபஹித் காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இராணுவத் தலைவரும், தனது போர்ப் பயணங்களாலும் ஒருங்கிணைந்த தீவுக்கூட்டம் குறித்த தொலைநோக்குப் பார்வையாலும் இந்தோனேசியாவின் மிகவும் கொண்டாடப்படும் வரலாற்று ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்பவருமான கே.ஆர்.ஐ. கஜா மாடாவின் நினைவாக, இந்த விமானம் தாங்கி கப்பல் அடுத்த வாரம் இந்தோனேசிய கடற்படையில் 'கே.ஆர்.ஐ. கஜா மாடா' என்ற பெயரில் முறைப்படி சேர்க்கப்படவுள்ளது.
நிதி நெருக்கடி
ஆனால், கரிபால்டி கப்பலின் கையகப்படுத்தல் என்பது, பாதுகாப்பு ஆய்வாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மத்தியில் கடும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

இந்தோனேசியாவுக்கு ஒரு விமானம் தாங்கி கப்பல் தேவையா என்றும், உள்நாட்டில் அதிகரித்து வரும் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வேளையில், பழமையான ஒரு போர்க்கப்பலைப் புதுப்பித்து இயக்குவதற்காக அரசாங்கம் மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவிட வேண்டுமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தோனேசியாவின் நிதி அமைச்சகம் 2025 ஆம் ஆண்டில் விமானம் தாங்கி கப்பல் திட்டத்திற்கு 450 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்திருந்தது.