243 பேர்களுடன் கடலில் மாயமான இந்தோனேசியப் பயணிகள் கப்பல்
Indonesian passenger ship missing at sea: கடலில் காணாமல் போன இந்தோனேசியப் பயணிகள் கப்பல்.
ஜாவா கடற்பகுதியில் தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 243 பேருடன் சென்ற இந்தோனேசியப் பயணிகள் கப்பல் ஒன்று காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு துண்டிப்பு
முதற்கட்ட தகவலில், மோசமான வானிலை நிலவிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இச்சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் தேடுதல் மற்றும் மீட்புப் பணி முகமை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. விர்கோ டிரான்ஸ்போர்ட் 8 (Virgo Transport 8) என்ற அந்த கப்பல், கிழக்கு ஜாவா நகரமான சுரபாயாவிலிருந்து தெற்கு கலிமந்தன் நகரமான பன்ஜார்மாசின் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அந்த முகமை தெரிவித்துள்ளது.
மேலும், அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில், அந்தக் கப்பலைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அது எங்குள்ளது என்பது தெரியவில்லை என்றும் அந்த முகமை தெரிவித்துள்ளது.
இதனிடையே, மீட்புக் குழுவினர் தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளதாகவும், அது கடைசியாக அறியப்பட்ட இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளதாகவும் அந்த முகமை குறிப்பிட்டுள்ளது.
17,000 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமான இந்தோனேசியா, போக்குவரத்தின் முக்கிய வழியாகப் படகு சேவைகளை பெரிதும் நம்பியுள்ளது; ஏனெனில், விமானப் பயணத்தை விடக் கடல் வழிப் பயணங்கள் குறைந்த செலவுடையதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளன.
இருப்பினும், பாதுகாப்புத் தரநிலைகள் எப்போதும் கடுமையாக அமுல்படுத்தப்படுவதில்லை; இதன் விளைவாக விபத்து விகிதம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.