பிச்சைக்காரராக வாழ்ந்து வந்த கோடீஸ்வரர்! இந்தூர் மனிதனின் வியப்பூட்டும் சொத்து மதிப்பு
இந்தூரில் பிச்சைக்காரர் ஒருவரிடம் பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பிச்சைக்காரராக வாழ்ந்து வரும் கோடீஸ்வரர்
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், அதிகாரிகள் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, “மங்கிலால்” (Mangilal) என்ற மாற்றுத்திறனாளியை கண்டுபிடித்துள்ளனர்.
சாலையில் இரும்பு ரிக்சா வண்டி ஒன்றில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மங்கிலாலை பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு துறையினர் மீட்டுள்ளனர்.
இதன் பிறகு அவர் தொடர்பாக விசாரித்த போது மங்கிலால் கோடீஸ்வரர் என்பது தெரியவந்துள்ளது.

ஒரு நாளைக்கு பிச்சை எடுத்து ரூ.500 முதல் ரூ.1000 வரை சம்பாதிக்கும் மங்கிலாலின் சொத்து மதிப்பை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மங்கிலாலின் சொத்து விவரங்கள்
மங்கிலாலுக்கு பகத்சிங் நகரில் மூன்று அடுக்கு மாடி வீடு ஒன்றும், 600 சதுர அடியில் சிவ் நகரில் ஒரு வீடும் சொந்தமாக உள்ளது.
அத்துடன் தன்னுடைய உடல் ஊனத்தை காட்டி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அல்வாசாவில் வீடு ஒன்றையும் மங்கிலால் பெற்றுள்ளார்.
அத்துடன் 3 ஆட்டோ ரிக்ஷாக்களை வாடகைக்கு விட்டுள்ள மங்கிலால், சொந்தமாக Swift dzire கார் ஒன்றையும் வைத்துள்ளார்.
இந்த காரை ஓட்டுவதற்கு தனியாக சம்பளத்திற்கு ஓட்டுநர் ஒருவரையும் மங்கிலால் பணியில் அமர்த்தியுள்ளார்.
மங்கிலால் பிச்சை எடுப்பதை தவிர அதிக வட்டிக்கு கடன் வழங்கி, இதற்காக வாராந்திர மற்றும் தினசரி வட்டியையும் வசூலித்து வருகிறார்.

அதிகாரிகள் விசாரணை
இந்நிலையில் ஏற்கனவே சொந்தமாக வீடு வைத்துள்ள மங்கிலாலுக்கு எப்படி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக விசாரிக்க மங்கிலால் மாவட்ட ஆட்சியரின் முன்னிலை ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |