பெருகும் பாதிப்பு எண்ணிக்கை... ஐரோப்பா முழுவதும் வெடித்த போராட்டம்
ஐரோப்பிய நாடுகளில் ஓமிக்ரான் பரவல் ஒருபக்கம் அதிகரித்து வரும் நிலையில், மறுபக்கம் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
ஐரோப்பாவில் முதல் நாடாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது டென்மார்க். ஆனால், நாளும் பெருகிவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை காரணமாக தற்போது டென்மார்க் உட்பட ஐரோப்பிய நாடுகள் பல கடுமையான கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவந்துள்ளது.
ஜூலை 19ம் திகதி தேசிய ஊரடங்கு கட்டுப்படுகளை நீக்கியது பிரித்தானியா. தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படுமா என்பதில் சந்தேகம் என்கிறார் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித்.
இந்த முறை கிறிஸ்துமஸ் ஊரடங்கில் கடந்தாலும் வியப்பதற்கில்லை என குறிப்பிட்டுள்ளார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன். கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இன்னும் தாமதமானால், மாத இறுதிக்குள் பாதிப்பு எண்ணிக்கை 2 மில்லியனைத் தொடும் என்ற எச்சரிக்கையும் நிபுணர்கள் தரப்பால் விடுக்கப்பட்டுள்ளது.
உறுதியான காரணங்கள் இன்றி பிரித்தானியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை என பிரான்ஸ் அறிவிக்க, சுவிட்சர்லாந்தும் ஜேர்மனியும், மிக ஆபத்தான பகுதி என பிரித்தானியாவை அடையாளப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு விதிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பெல்ஜியத்தில் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். பெல்ஜியத்தில் நவம்பர் 26 முதல் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மதுபான விடுதிகள் உணவகங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட விருந்து கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் புதிதாக உறுதி செய்யப்படும் கொரோனா பாதிப்புகளில் 10ல் ஒன்று ஓமிக்ரான் தொற்று என நம்பப்படுகிறது.
அயர்லாந்தில் டிசம்பர் 20ம் திகதி முதல் இரவு 8 மணிக்கு மேல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஊரடங்கானது ஜனவரி 30 வரையில் பின்பற்றப்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நிர்வாகம் தற்போதை சூழலில் இன்னொரு ஊரடங்கை விதிக்க தயக்கம் காட்டுகிறது. இருப்பினும் பிரித்தானியா உட்பட வெளிநாட்டுப்பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மட்டுமின்றி புத்தாண்டு தொடர்பான அனைத்து கொண்டாட்டங்களை பிரான்ஸ் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
பிரித்தானியாவில் இருந்து ஜேர்மனி செல்லும் அனைவருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை அங்குள்ள நிர்வாகம் விதித்துள்ளது. இந்த விதிகள் ஜனவரி 3ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக பெல்ஜியம், ஆஸ்திரியா, பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.