பொலிசாரிடம் 14 முறை புகார்... இறுதியில் இரு பிள்ளைகளை அனாதையாக்கி சென்ற தாயார்
அமெரிக்காவில் துர்நடத்தை கொண்ட முன்னாள் காதலனால் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக பின்தொடர்ந்து தொல்லை அளித்து வந்த அந்த நபர், அடுத்த நிமிடத்தில் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் அமைந்துள்ள செயிண்ட் பால் நகரிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
தூவா போர் லாவோ என்ற அந்த 39 வயதான நபர் பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட 19 நாட்களில் தமது முன்னாள் காதலியான 39 வயது பாவோ யாங் என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
தமது பாதுகாப்பு தொடர்பில் யாங் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்த ஒரு வாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் அவர்களது உறவு முறிந்தபின், மோசமான மற்றும் முரடனான லாவோவிலிருந்து விலகிச் செல்லவே யாங் முயற்சித்திருந்தார்.
மட்டுமின்றி 8 மாதங்களில் 14 முறை லாவோ தொடர்பில் யாங் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளார். இருப்பினும், லாவோ தொடர்ந்து துன்புறுத்தியே வந்துள்ளார் என கூறப்படுகிறது
யாங் மற்றும் லாவோ சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் அவரது முன் தோட்டத்தில் துப்பாக்கி குண்டுக் காயங்களுடன் சடலமாக கிடப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
யாங் தமது 11 மற்றும் 21 வயதுடைய இரு பிள்ளைகளுடன் அந்த குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். லாவோ குறித்து தொடர்ந்து புகார் அளித்து வந்ததால், பொலிசார் 14 முறை யாங் குடியிருப்புக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் வந்துள்ளனர்.
ஆனால் 15வது முறை பொலிசார் தொடர்பு கொண்ட போது, அது அவர்களுக்கு மரணச் செய்தியாக அமைந்துள்ளது என உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

