நேபாளப் பெருவெள்ளம்... இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாகிகளில் ஒருவர் மாயம்
Infosys CEO Missing After Nepal Floods: நேபாள வெள்ளத்திற்குப் பிறகு இன்ஃபோசிஸ் பப்ளிக் சர்வீசஸ் தலைமை நிர்வாக அதிகாரி மாயம்.
நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இன்போசிஸ் பப்ளிக் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஃபோசிஸ் பப்ளிக் சர்வீசஸ் என்பது துணை நிறுவனமாகும் இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக லக்ஸ் கோபிசெட்டி செயல்பட்டு வந்துள்ளார்.
முன்னணி தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸின் துணை நிறுவனமான 'இன்ஃபோசிஸ் பப்ளிக் சர்வீசஸ்' (Infosys Public Services), முக்கியமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பொதுத்துறையில் கவனம் செலுத்தி வருகிறது.
கோபிசெட்டி நேபாளத்திற்குத் தனிப்பட்ட முறையில் சென்றிருந்ததாக பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது; மேலும், அவரது பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதே தங்கள் உடனடி முன்னுரிமை என்றும் இன்ஃபோசிஸ் குறிப்பிட்டுள்ளது.
கோபிசெட்டி தொடர்பில் தகவல்களைச் சேகரிக்கவும், அவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, அவரது குடும்பத்தினருடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், இக்கட்டான இச்சூழ்நிலையில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
மேலும், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் வெள்ளம் மற்றும் துயரமான உயிரிழப்புகள் குறித்து தாங்கள் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, குறைந்தது 320 இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் 400 பேர் சீனப் பகுதியில் சிக்கித் தவிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதனிடையே, சீனப் பகுதியில் சிக்கியிருந்த 153 இந்தியக் குடிமக்கள் பாதுகாப்பாக நேபாளத்திற்குச் சென்றுவிட்டதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்ஃபோசிஸ் இணையதளத்தில் உள்ள கோபிசெட்டியின் விவரக்குறிப்பின்படி, அரசுத் துறை நிறுவனங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான உத்தி, தொழில்நுட்பம், செயல்பாடுகள் மற்றும் மாற்றங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குகிறார்; அத்துடன், அர்த்தமுள்ள இலக்குகளை அடைவதற்கான நிறுவனத்தின் உத்தி மற்றும் அதன் செயலாக்கத்தையும் அவர் மேற்பார்வையிடுகிறார்.
அவரது தற்போதைய பதவிக்கு முன்பு, கோபிசெட்டி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உலகளாவிய துணைத் தலைவராகவும், வணிகப் பயன்பாடுகள் மற்றும் டிஜிட்டல் பணிச்சூழல் சேவையின் தலைவராகவும் இருந்தார்.
அப்போது அவர் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் இத்துறையை உலகளவில் விரிவுபடுத்தினார். இன்ஃபோசிஸில் சேருவதற்கு முன்பு, கோபிசெட்டி ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்தார், அங்கு அவர் வட அமெரிக்காவில் சுகாதாரம் மற்றும் பொது சேவைகள் வணிகத்தின் ஒரு பிரிவை வழிநடத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |