ஒரேயடியாக 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்... சொன்ன காரணம்
இன்ஃபோசிஸ் மைசூர் அலுவலகத்திலிருந்து சுமார் 700 ஊழியர்கள் ஒரேயடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
3 வாய்ப்புகள்
குறித்த 700 ஊழியர்களும் அடிப்படை பயிற்சி பெற்று வந்ததாகவும், ஆனால் மூன்று முயற்சிகளுக்கு பின்னரும்கூட உள்நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறி இந்த பணி நீக்கம் நடந்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் சார்பில் கல்வி வளாக நேர்காணல் மூலம் வேலைக்கு பலர் தெரிவாகியிருந்தனர். இவர்களுக்கு மைசூரு வளாகத்தில் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளது.
பயிற்சி பெற்றவர்களுக்கு உள்நுழைவுத் தேர்வும் நடத்தப்பட்டிருக்கிறது. மொத்தம் 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் ஒன்றில் தேர்ச்சி பெற்றால் கூட பணியில் தொடர முடியும். ஆனால் தற்போது வெளியேற்றப்பட்டவர்கள் 3 வாய்ப்புகளிலும் தேர்ச்சி அடையவில்லை.
அதன் காரணமாக வெளியேற்றப்பட்டதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு நடந்த விவகாரமே வேறு. இன்ஃபோசிஸ் நிறுவனம் பாதி உண்மையை மட்டும்தான் தெரிவித்திருக்கிறது என ஐடி தொழிலாளர்கள் சங்கமான என்ஐடிஇஎஸ் (NITES) குற்றம்சாட்டியுள்ளது.
இன்ஃபோசிஸ் சார்பில் கல்வி வளாக நேர்காணல் மூலம் வேலைக்கு எடுக்கப்பட்டு தற்போது வெளியே அனுப்பப்பட்ட பலர் 2022ல் படித்து முடித்து வெளியேறியவர்கள்.
அத்துமீறல்
இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பின்னர்தான், ஆண்டுக்கு ரூ.3.2-3.7 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என பணி ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. 2023 அக்டோபரில்தான் இவர்கள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
அதன் பிறகு நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று சொல்லி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். மட்டுமின்றி, வளாகத்திற்குள் அலைபேசி உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது என்பதால், ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறலை வெளியில் கொண்டுவர முடியவில்லை என NITES தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் உத்தியோகப்பூர்வமாக புகார் அளிக்க இருப்பதாகவும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தன்னிச்சையான முடிவு கண்டனத்திற்கு உரியது என்றும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |