ரஷ்ய படைகளின் தாக்குதலில் சிக்கிய குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடும் தந்தை... கதறும் தாய்: எல்லை மீறும் புடின்
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று ஒரு பக்கம் ரஷ்ய அதிபர் புடின் கூறிக்கொண்டிருக்க, மறுபக்கம் அவரது படையினரால் குழந்தைகள் முதலான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் கோரம் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது உக்ரைனில்...
அதை நிரூபிக்கும் வகையில், ரஷ்ய படைகளின் தாக்குதலில் சிக்கிய தனது 18 மாதக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடும் ஒரு உக்ரைனியரைக் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகி காண்போர் மனதைக் கலங்கடிக்கச் செய்துள்ளது.
Kirill என்ற அந்த 18 மாதக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அதன் தந்தையான Fedor மருத்துவமனைக்குள் ஓட, பெற்ற வயிறு துடிக்க, குழந்தையின் தாய் Marina Yatsko கதறியபடி பின்னாலேயே ஓடுவதைக் காட்டுகிறது அந்த புகைப்படம்.
போர் நிறுத்தம் செய்வதாகக் கூறிய சில நிமிடங்களுக்குள் மீண்டும் ரஷ்யப் படைகள் குண்டுமழை பொழிந்ததில், Mariupol நகரில் அந்தக் குழந்தை தாக்கப்பட்டிருக்கிறான்.
Kirillஇன் பெற்றோர் படுகாயமடைந்த அவனை மருத்துவமனைக்குத் தூக்கிவந்தாலும், உண்மையில் அவன் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்பே உயிரிழந்துவிட்டிருக்கிறான் என்பது பின்னர் தெரியவர, ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்படிருந்த தங்கள் குழந்தையின் உடலைக் கட்டியணைத்துக் கண்ணீர் விட்டுக் கதறியிருக்கிறார்கள்.
குழந்தைகள் என்றோ பொதுமக்கள் என்றோ பார்க்காமல் பலிவாங்கும் இந்த யுத்தத்துக்கு பலியானது இந்த ஒரு குழந்தை மட்டுமல்ல, மேலும் பல அப்பாவிகளும் பலியாகியுள்ளார்கள்.
ஒரு குடும்பம், எப்படியாவது போருக்குத் தப்பி நாட்டைவிட்டு வெளியேறிவிடவேண்டும் என்று பெட்டி படுக்கைகளுடன் உயிர் தப்ப ஓடிக்கொண்டிருந்த நிலையில், ரஷ்ய வீரர்களின் தாக்குதலில் சிக்கி, சாலையோரம் குழந்தைகள் உட்பட, அந்தக் குடும்பமே சடலங்களாக கிடப்பதையும், அவர்களது பெட்டி படுக்கைகள் அவர்கள் அருகில் கிடப்பதையும் மற்றொரு படத்தில் காணமுடிகிறது.
இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதியின் மனைவியாகிய Olena Zelenska, புடினுடைய படை வீரர்கள் உக்ரைனிய குழந்தைகளை தெரிந்தே கொன்றுகொண்டிருப்பதாகவும், இந்த பயங்கர விடயத்தை உலகுக்குத் தெரியப்படுத்துமாறும் சர்வதேச ஊடகங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.