இறப்பதற்கு முன் கடைசியாக தாய் டயானாவுடன் ஹரி, வில்லியம் பேசியது என்ன?
ஆகத்து மாதம் 31ஆம் திகதி இளவரசி டயானா விபத்தில் மரணமடைந்த நாள். மறைந்த தங்கள் தாயை நினைவுகூறும் வகையில் இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
மரணமடையும் முன் மகன்களிடம் கடைசியாக பேசிய டயானா
இளவரசி டயானா, தான் விபத்தில் மரணமடைவதற்கு முந்தைய இரவு, தன் மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரியுடன் பேசுவதற்காக அவர்களை தொலைபேசியில் அழைத்துள்ளார். தங்கள் தாய் தங்களுடன் கடைசியாக பேசும் தருணம் அது என்பது இளவரசர்களுக்குத் தெரியாது!
என்ன பேசினார் டயானா?
உங்கள் தாய் டயானா உங்களிடம் கடைசியாக என்ன பேசினார் என கேட்டபோது, இளவரசர் ஹரி, ’கடைசியாக நான் அம்மாவுடன் என்ன பேசினேன் என்பது எனக்கு நினைவில்லை, ஒரே ஒரு விடயம் என் வாழ்நாளெல்லாம் என்னை உறுத்திக்கொண்டே இருக்கும். அது, மிக குறைந்த நேரமே நான் அவரிடம் பேசினேன் என்பதுதான்.
அதை இப்போது நினைத்துப்பார்க்கும்போது, அது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. அதை என் வாழ்நாள் முழுவதும் நான் எதிர்கொண்டாகவேண்டும்.
அம்மாவின் வாழ்வு அன்று இரவு முடியப்போகிறது என்பது எனக்கு கொஞ்சமாவது தெரிந்திருந்தால், எங்களுக்குள்ளான உரையாடல் எப்படி இருந்திருக்கும்?’ என்று கூறினார் ஹரி.
இளவரசர் வில்லியம் கூறியதென்ன?
இளவரசி டயானா சார்லஸ் தம்பதியரின் முதல் மகனான இளவரசர் வில்லியம் கூறும்போது, ’அம்மாவிடமிருந்து வந்த கடைசி தொலைபேசி அழைப்பு பால்மோரலில் இருந்து வந்தது. அப்போது, நானும் ஹரியும் உறவினர் பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தோம்.
குட் பை அம்மா, சீக்கிரம் சந்திக்கலாம், இப்போது நான் போகலாமா? என்றுதான் நானும் ஹரியும் கூறிவிட்டு விளையாட ஓடுவதிலேயே குறியாக இருந்தோம்.
என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்திருந்தால், எங்களுக்கிடையிலான உரையாடல் அப்படி இருந்திருக்காது. அந்த தொலைபேசி அழைப்பு, பெரும் பாரமாக என் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது’ என்றார்.
மறுநாள், டயானா பயணம் செய்த கார் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததாக வந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனார்கள் இளவரசர்கள் வில்லியமும், ஹரியும்...
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |