அமெரிக்காவில் அவமானப்படுத்தப்பட்ட டாடா பழிவாங்கிய கதை: எடுத்துக்காட்டாக மாறிய செயல்
புகழ்பெற்ற தொழிலதிபரும் சிறந்த வள்ளலுமான ரத்தன் டாடா இந்த உலகைவிட்டு பிரிந்த நாள் அக்டோபர் 9 ஆம் திகதி. அவரது பிரிவு வணிக உலகில் ஒரு வெற்றுடத்தை உருவாக்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.
பழி வாங்கிய ரத்தன் டாடா
டாடா தனது அடிப்படையான மற்றும் தாராள மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அவர் எப்போதும் அமைதியாகவும், நிதானமாகவும் காணப்படுவார். வெகு சிலரே அவரது ஆவேசமான பக்கத்தைப் பார்த்திருக்கிறார்கள்.
ஆனால், ரத்தன் டாடாவும் ஒருவரை பழி வாங்கியிருக்கிறார். அவரது அந்த செயல் எடுத்துக்காட்டாகவும் மாறியது. டாடா மோட்டார்ஸ் தொடர்பிலேயே ரத்தன் டாடா பழி வாங்கியுள்ளார்.
1990களில் பயணிகள் கார் பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இண்டிகா காரை பிரமாண்டமாக அறிமுகப்படுத்தியது. ஆனால் போட்டிக்கு ஈடான விலை மற்றும் பிரமாண்டமான அறிமுகம் இருந்தபோதிலும், இண்டிகாவின் விற்பனை போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இண்டிகா கார் நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது, இதனால் டாடா நிறுவனம் பயணிகள் கார் பிரிவை விற்க முடிவு செய்தது. இந்த விற்பனைக்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமெரிக்க கார் உற்பத்தியாளரான ஃபோர்டு மோட்டார்ஸுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.
இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ரத்தன் டாடா அமெரிக்காவிற்குச் சென்று ஃபோர்டு மோட்டார்ஸின் தலைவர் பில் ஃபோர்டை சந்தித்தார். முக்கியமான சந்திப்பின் போது, பில் ரத்தன் டாடாவை கேலி செய்யத் தொடங்கினார்.
அவர் டாடாவிடம், இந்தத் தொழிலைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாவிட்டால், நீங்கள் ஏன் பயணிகள் கார் பிரிவைத் தொடங்கினீர்கள்? என்று கேட்டார். மேலும், உங்களுடைய இந்த தொழிலை நாங்கள் வாங்கினால், அது எங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்றார்.
உலக சந்தையில் ஆதிக்கம்
எதிர்பார்க்காத இந்த அவமானத்துடன் இந்தியா திரும்பிய ரத்தன் டாடா, டாடா மோட்டார்ஸின் பயணிகள் கார் வணிக விற்பனையை ஒத்திவைத்தார். ஒன்பது ஆண்டுகளாக, அந்த சம்பவத்தைப் பற்றிப் பேசாமல், டாடா மோட்டார்ஸின் வணிகத்தை விரிவுபடுத்துவதில் அமைதியாக கவனம் செலுத்தினார்.
2008 ஆம் ஆண்டு வாக்கில், டாடா மோட்டார்ஸ் உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது, மேலும் நிறுவனத்தின் கார்கள் உலகிலேயே அதிகம் விற்பனையாகும் காராக மாறியது.
டாடா மோட்டார்ஸின் வணிகம் புதிய உயரங்களைத் தொட்டபோது, ஃபோர்டு மோட்டார்ஸ் திவாலாவதன் விளிம்பில் இருந்தது. இதை அறிந்த ரத்தன் டாடா ஒரு பெரிய நகர்வை முன்னெடுத்தார், பில் ஃபோர்டிடமிருந்து ஃபோர்டின் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்டுகளை வாங்க முன்வந்தார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரத்தன் டாடா பில் ஃபோர்டை சந்தித்தபோது, டாடாவின் இந்த முடிவிற்காக நன்றி தெரிவித்த அவர், ஜாகுவார்-லேண்ட் ரோவரை வாங்குவதன் மூலம் நீங்கள் எங்களுக்கு ஒரு பெரிய உதவியைச் செய்கிறீர்கள் என நெகிழ்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |