கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 40 வயதுக்கு உட்பட்டவர்கள்... சுவிஸில் ஸ்தம்பிக்கும் நிலையில் ஒரு மாநிலம்
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை தொடர்ந்து உச்சம் பெற்றுவருவதாக அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மொத்தமுள்ள தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளில் பெரும்பாலானவை நிரம்பியுள்ளதாகவும், மாநில சுகாதாரத்துறை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையை நாடுவோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளதாக குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை, கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 40 வயதுக்கு உட்பட்டவர்களே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக Insel பல்கலைக்கழக மருத்துவமனையின் இயக்குனர்களில் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சராசரியாக கொரோனா நோயாளிகள் 9 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறும் அவர், மாரடைப்பு ஏற்பட்டால் கூட நோயாளி ஒருவர் 2 நாட்கள் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 8 பேர்கள் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, பெர்ன் மாநிலத்தில் உள்ள 12 முதல் 16 வயதுடைய 40,000 சிறுவர்களில் 13,000 பேர்கள் தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.