சவுதி விமான நிலையத்தில் பரபரப்பு... சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம்
சவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமானம் (டிரோன்) தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை சவுதியில் அபா விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த முயன்ற ஆளில்லா விமானத்தை வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமான பாகங்கள் தாக்கியதில் 12 பேர் காயமடைந்ததாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் அடங்குவர் என கூட்டுப்படை தகவல் தெரிவித்துள்ளது.
ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்தை, ஹவுத்தி போராளிகள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றிய தலைநகர் சானாவை கைப்ப்றறிய பின்னர், 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சவுதி தலைமையிலான கூட்டுப்படை போராளிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகிறது.
#UPDATE Twelve people were injured by falling debris after the Saudi military blew up a drone targeting an airport close to the Yemen border, officials said on Thursday pic.twitter.com/hIMdjvJmKA
— AFP News Agency (@AFP) February 10, 2022
சவுதி அரேபியாவின் தெற்கில் ஏமன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அபா விமான நிலையத்தையும், நாட்டின் பிற பகுதிகளையும் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஹவுத்திக்கள் அடிக்கடி குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதில் பெரும்பாலான தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்படுகின்றன, ஆனால் ஹவுத்தி தாக்குதலில் சவுதியில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமனில் ஹவுத்திகள் இருக்கும் பகுதிகளை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.